‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ - திரை விமர்சனம்

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ - திரை விமர்சனம்

காட்சி அனுபவத்தில் சினிமாவுக்கென புதிய பாதையை வித்திட்ட ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்திருக்கிறதா ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’?

’அவதார்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் நவிக்கள் வாழும் பண்டோரா உலகத்தை அழித்து, அந்த இடத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்வார்கள். இதில் நாயகன் ஜாக் சல்லிக்கும், கர்னல் மைல்சுக்கும் இடையில் யுத்தம் நடக்கும். இதில் கர்னல் தோற்று விட, பண்டோராவை விட்டு ஆகாயவாசிகள் சென்று விடுவார்கள். அதன் பிறகு ஜாக் சல்லியும் நேத்ரியும் தங்களுடைய குழந்தை சகிதமாக மகிழ்ச்சியாக பண்டோரா உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெரும் படையுடனும் ஆயுத பலத்துடனும், நாயகன் ஜாக் சல்லியை அழிக்க கர்னல் வருகிறார்.

அவரிடமிருந்து தப்பிக்க ஜாக் சல்லியும் அவனது குடும்பமும் கடல்வாசிகளான மெட்கயினாவுடன் அடைக்கலம் ஆகிறார்கள். அங்கேயும் ஜாக் சல்லியை தேடி கர்னல் நெருங்குகிறார். கடல் வாழ் ராட்சத மீன்களின் அபூர்வ திரவத்தை மனித இனத்தின் தேவைக்காக அபகரிக்க முயலும் இன்னொரு குழுவும் இன்னொரு திசையிலிருந்து வருகிறார்கள். கடல்வாசிகளும் வனவாசிகளும் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? ஜாக் சல்லியின் குடும்பம் என்னவானது என்பதுதான் ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் கதை.

முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம். அவதார் முதல் பாகம், சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை அறிமுகப்படுத்தியது. பண்டோரா உலகமும், நவி இனமக்களும், அதன் கிராஃபிக்ஸ் காட்சிகளும் நிஜமாகவே பார்வையாளர்களுக்கு பிரம்மிப்பூட்டும். முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் திரையனுபவம் இன்னும் அட்டகாசமாக இருக்கிறது.

கடல்வாசிகளும், அவர்களின் உலகமும், கடலுக்கடியில் உள்ள வண்ண மீன்களும், அன்பு காட்டும் இராட்சத மிருகம், அவர்களோடு உறவாடி அன்பு காட்டும் மக்கள், போருக்கு பயன்படுத்தும் இராட்சத பறவைகள், கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.. என ஒவ்வொன்றும் திரையில் 3டி-யில் விரியும் போது, நாமும் அந்த உலகத்திற்கு பயணிக்கும் அனுபவத்தை வழங்கியதில் படக்குழு வெற்றி பெற்றிருக்கிறது.

கிராஃபிக்ஸ் அனுபவத்துக்கு நிகராக பின்னணி இசையும் ஈர்க்கிறது. சாம் வொர்திங்டன், ஸ்டீபன் லேங், ஜாய் சல்டனா என நடிகர்களின் தேர்ந்த நடிப்பும், தொழில்நுட்பமும் ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்திற்கான ரசிகர்களின் காத்திருப்புக்கு நியாயம் சேர்க்கிறது. ஆனால், ’ஹீரோ- வில்லன்’ இடையிலான யுத்தமாக கதை சுருங்கிப் போயிருப்பது பெரும் ஏமாற்றம்.

‘அவதார்’ படத்தின் முதல் பாகம் புதிய காட்சியனுபவம் மற்றும் கதைக் களத்தை வழங்கியது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாம் பாகத்தில் காட்சியனுபவம் தவிர்த்து கதையில் சிலாகிப்பதற்கு கூடுதல் அம்சங்கள் இல்லை. காலங்காலமாக தமிழ் சினிமாவில் ஹீரோ தன் குடும்பத்தைக் காக்க வில்லனுடன் முட்டி மோதி வெற்றிப் பெறும் அதர பழசான கதையை அடித்து துவைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன். இது தவிர யூகிக்க எளிதான கதைக்களம், படத்தின் நீளம் ஆகியவை அயர்ச்சியைக் கூட்டுகின்றன.

மொத்தத்தில், கதையை சற்று சகித்துக் கொண்டால், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் குழந்தைகள் சகிதம் குடும்பத்தோடு மகிழ்வதற்கான திரையனுபவத்துக்கு உத்திரவாதமளிக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in