விஷூவல் மிரட்டலில் அவதார்- 2: தரிசனத்துக்கு தயாரா?

விஷூவல் மிரட்டலில் அவதார்- 2: தரிசனத்துக்கு தயாரா?

அவதார் வரிசையின் அடுத்த திரைப்படமான ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி அவதார் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

அவதார் திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து அதன் அடுத்த பாகமான ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) நாளை(டிச.16) வெளியாகிறது. 2009-ல் வெளியான அவதார் திரைப்படம் மகத்தான வெற்றியடைந்ததும், அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்த வருடமே அவதார் வரிசையின் அடுத்த பாகத்தை அறிவித்தார். 2014-ல் வெளியிட திட்டமிட்டிருந்த அவதார் -2, அதற்கடுத்த பாகத்துக்கான படப்பிடிப்பையும் கோரியதில் ரிலீஸ் ஏற்பாடுகள் 2019-க்கு தள்ளிப்போனது. இந்த வகையில் 2009ஆம் ஆண்டின் அவதாரை அடுத்தடுத்த பாகங்களில் 2 அவதார்கள் தொடர இருக்கின்றன.

ஜேம்ஸ் கேமரூன்
ஜேம்ஸ் கேமரூன்

உண்மையில் ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டிருப்பது 5 அவதார்கள். தற்போது தயாராக இருக்கும் 2 மற்றும் 3-வது அவதார்களின் வெற்றியைப் பொறுத்து 4 மற்றும் 5-வது பாகங்களை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார். ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற நாமகரணத்திலான அவதார்-2 நடப்பாண்டில் வெளியாக, அடுத்தடுத்த அவதார்கள் இரு ஆண்டுகள் இடைவெளியில் வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் 3-வது அவதார் 2024-ல் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 2 மற்றும் 3-ஆம் பாகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, 4 மற்றும் 5-வது அவதார்கள் 2016 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் வெளியிடுவது குறித்து ஜேம்ஸ் கேமரூன் தீர்மானிப்பார்.

இப்போது மீண்டும் அவதார்-2 ரிலீஸுக்கு வருவோம். ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம், சினிமா வரலாற்றில் மிகப்பெரும் பட்ஜெட் படங்களின் வரிசையில் சேர இருக்கிறது. சினிமா வரலாற்றில் இதுதான் அதிக செலவில் உருவான திரைப்படம் என்றும் சொல்லிவிடலாம். ஆனால் அக்காலத்தில் வெளியான பெரும் பட்ஜெட் திரைப்படங்களை ஒப்பிடுவதில் பணவீக்க கணக்குகள் உதைக்கும் என்பதால் இப்படி முடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. சுமார் 379 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவான ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ பட வரிசையின் 4வது திரைப்படம், உலகளவில் பெரும் பட்ஜெட் திரைப்படம் என்ற அங்கீகாரத்துக்கு சொந்தமாக இருந்தது. தற்போது சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான அவதார்-2 திரைப்படம் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.

அவதார்-2 வெளியீட்டை முன்னிட்டு, 2009-ல் வெளியான அவதார் திரைப்படத்தின் மெருகூட்டப்பட்ட டிஜிட்டல் பதிப்பு அண்மையில் வெளியானது. திரையரங்கில் வெளியாகி மாமாங்கமான அந்த திரைப்படத்தை மீண்டும் ரசிகர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். தற்போதைய ரீ-ரிலீஸ் திரைப்படங்களுக்கும் அவதார் வெற்றியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். முதல் அவதாரின் தொடர்ச்சியாகவே அவதார்-2 திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது என்பதால், ரசிகர்களின் ரசனைக்கு உதவும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பண்டோரா கிரகத்தில் வனத்தில் வாசம் செய்த அவதார்ஸ், இரண்டாம் பாகத்தில் ஆழ்நீரில் வாசம் செய்கிறார்கள். வழக்கம்போல சுற்றுச்சூழல், சக உயிர்கள் மீதான நேசம், அவதார்ஸ் இடையிலான காதல், மோதல் களேபரங்கள், பண்டோராவுக்கு எதிராக படையெடுக்கும் இன்னொரு கூட்டம், அதனை தீரத்துடன் எதிர்கொள்ளும் அவதார்ஸ் என பழகிய பாதையில்தான் அவதார்-2 திரைப்படத்தின் கதையும் பயணிக்கிறது. ஆனால் திரைக்கதையில் அதனை எப்படி சமைத்திருக்கிறார்கள், நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு அதனை விஷூவல் மிரட்டலில் எப்படி பரிமாறுகிறார்கள் என்பதில்தான் அவதார்-2 திரைப்படம் வித்தியாசப்படுகிறது.

முதல் அவதாரில் நடித்த நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் அதன் அடுத்த பாகத்திலும் தோன்றுகிறார்கள் என்றபோதும், கூடுதலாக கேத் வின்ஸ்லெட் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களும் புதிய அவதாரில் இணைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அவதார் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இம்முறை ஒரு பான் இந்திய திரைப்படத்துக்கான லட்சணங்களோடு, முக்கியமான பிராந்திய மொழிகளிலும் அவதார்-2 டப் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உலகம் முழுக்க நூற்றுக்கும் மேலான மொழிகளில் அவதார் -2 வெளியாகிறது. இத்தோடு திரையரங்குகளில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய தரமான விஷுவல் அனுபவத்துக்காக, ’ஐமேக்ஸ்’, ’3டி’ பதிப்புகளிலும் அவதார்-2 வெளியாகிறது. ஓடிடியில் முடங்கி கிடக்கும் ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அவதார்-2 இழுத்து வரும் என்று நம்பலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in