’அவள் அப்படித்தான்’ ருத்ரய்யா அப்படித்தான்!

- இயக்குநர் ருத்ரய்யா நினைவுதின பகிர்வு
இயக்குநர் ருத்ரய்யா
இயக்குநர் ருத்ரய்யா

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு படம், நம்மை வெகுவாகத் தாக்கி நமக்குள் ஊடுருவியிருக்கும். அது ‘தில்லானா மோகனாம்பாள்’ மாதிரியான படமாகவும் இருக்கும். ‘காதலிக்க நேரமில்லை’ படமாகவும் இருக்கும். இன்னும் சில படங்கள் டிரெண்ட் செட்டர் படங்கள் எனப் பேரெடுக்கும்.

‘நாயகன்’ மாதிரியான படங்களை இப்படித்தான் சொல்லுவார்கள். சில படங்கள், எடுத்துக் கொண்டிருக்கிற கதையே நம்மைப் பிரமிக்கவைக்கும். அந்தக் கதை போகும் போக்கில் நம் மனம் கனத்துப் போய்விடும். கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சில் ஒருவித பந்து அடைத்துக்கொண்டு இம்சை செய்யும்.

‘’இந்த மாதிரி படங்களையெல்லாம் எடுக்க முடியாது. ரொம்ப ரிஸ்க்குப்பா’’ என்று வணிகத்தின் பின்னே ஓடியவர்களும் இருக்கிறார்கள். அதில் தவறில்லையென்றாலும், அத்தி எப்போதுதானே பூக்கும்? அப்படி சினிமாவில் அத்திப்பூத்தது போல் பூத்த இயக்குநர்களில் ருத்ரய்யாவும் ஒருவர்.

சேலம் ஆத்தூரில் பிறந்த ருத்ரய்யா, அப்துல்கலாம், எழுத்தாளர் சுஜாதா முதலானோர் படித்த திருச்சி ஜோஸப் கல்லூரியில்தான் படித்தார். சினிமா மீதான தாக்கம் அவருக்கு இளமையிலேயே வந்துவிட்டிருந்தது. வங்கப் படங்களைப் பார்த்துவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டே இருப்பார். வெளிநாட்டுப் படங்களின் கதை சொல்லும் பாணியைச் சிலாகித்துக் கொண்டே இருந்தார். ’’என்னடா ருத்ரா... நீ ஒரு சினிமாவைப் பத்தி என்னென்னவோ சொல்றே. எங்களுக்குத்தான் மலைப்பா இருக்கு’’ என்று புரிந்தும் புரியாமலும் வியந்தார்கள் நண்பர்கள்.

கமலுடன் ருத்ரய்யா
கமலுடன் ருத்ரய்யா

திருச்சியில் படித்து முடித்ததும், சென்னைக்கு வந்தார். திரைப்படக் கல்லூரியில் பயின்றார். அங்கே, திரைக்கதைக்கான படிப்பையும் இயக்கத்திற்கான பாடத்தையும் கற்றுக்கொள்ளச் சேர்ந்தார். திரைப்படக் கல்லூரியில் அடிக்கடி வெளிமாநிலப் படங்களைத் திரையிட்டுக் காட்டுவார்கள். சத்யஜித் ரே படங்களைப் பார்த்துவிட்டு அன்றிரவு தூக்கம் வராமல் தவித்ததை பின்னாளில் ருத்ரய்யாவே சொல்லியிருக்கிறார்.

திரைப்படக் கல்லூரியில் படிப்பு முடிந்தது. கோடம்பாக்கத்தை எட்டிப்பார்த்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களாக ‘கற்பகம்’ அப்போதே வந்திருந்தது. இன்னும் சில படங்களும் வந்திருந்தன. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ‘அரங்கேற்றம்’ படத்தைத் தந்தார். அதில் லலிதா எனும் கதாபாத்திரத்தை மிக அற்புதமாகவும் அவளின் உணர்வுக் கொந்தளிப்பையும் குடும்பத்துக்காக அவள் ஏற்றுக்கொண்ட துயரங்களையும் மிக மிக தைரியமாகவும் சொன்னார். இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்

அடுத்த வருடமே... ‘கவிதா’ எனும் கதாபாத்திரத்தைக் கொண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ இன்னுமொரு பாய்ச்சலை உண்டு பண்ணியது. சுஜாதவின் அம்மா கதாபாத்திரம், சுஜாதாவின் அண்ணி கதாபாத்திரம், தங்கை கேரக்டர், தோழி படாபட் கேரக்டர், படாபட் ஜெயலட்சுமியின் அம்மா கேரக்டர், சுஜாதா கதாபாத்திரம் என ஒவ்வொரு பெண்களின் உணர்வுகளை, மன ஓட்டங்களைத் திரையிட்டு, திரைவிலக்கி வெளிச்சமிட்டு உணர்த்தினார் கே.பாலசந்தர்.

இந்த சமயத்தில்தான் 1977-ம் ஆண்டு, ‘16 வயதினிலே’ மூலம் மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் பாரதிராஜா. கதை சொல்லும் பாணியில் புதுமை செய்ய ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

’நாம் படமாக்கப் போவது எப்படி இருக்கவேண்டும்’ எனும் சிந்தனையில் தெளிவு கிடைத்தது ருத்ரய்யாவுக்கு. எழுத்தாளர் வண்ணநிலவனுடனான நட்பு, இன்னும் சினிமாவை நாவலாக எடுக்கத் தூண்டியது. கமலின் நட்பு கிடைத்தது. கமலிடம் தான் எடுக்க நினைக்கும் கதையைச் சொன்னார். அதை எப்படி உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்பதையும் தெளிவுபடுத்தினார். புதுமைகளையும் சினிமாவில் நவீனங்களையும் பரிட்சித்துப் பார்க்க நினைக்கும் கமல், ருத்ரய்யாவுக்கு ஊக்கம் கொடுத்தார். ‘’நான் நடித்துக் கொடுக்கிறேன்’’ என்று உறுதி கொடுத்தார்.

ரஜினியிடம் பேசி அவரையும் சம்மதிக்க வைத்தார் கமல். இளையராஜாவிடம் ருத்ரய்யாவை அழைத்துச் சென்றார். அவருக்கும் கதை ரொம்பவே பிடித்துப் போனது. கண்ணதாசன், கங்கை அமரனெல்லாம் பாடல்கள் தந்தார்கள். ‘மஞ்சு’ எனும் நாயகி மிக முக்கியமானவள். அவள்தான் ஒவ்வொரு ஆணின் அலைக்கழிப்புக்கும் காயங்களுக்கும் ஆளாகிறாள். அந்தக் கேரக்டரை ஸ்ரீப்ரியா செய்தார். ஸ்ரீப்ரியா தவிர, வேறு எவரும் இந்த அளவுக்குச் செய்துவிட முடியாது.

டாக்குமென்ட்ரி எடுப்பதில் இருந்து ஆரம்பிக்கிற கதை. படமே கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாகிவிடும் அபாயமும் உண்டு. பெண் பித்தனாக ரஜினி. நெற்றியில் விபூதி. பெண்களை மதித்து இரக்கப்படுவதாக கமல். கம்யூனிஸ சிந்தனைவாதி. பெண்களை அவர்களின் வீக்னெஸைக் கொண்டே மடக்கிப் போட்டுக்கொள்கிற சிவசந்திரன் கதாபாத்திரம் என வெகு அழகாகவும் இயல்பாகவும் செய்திருந்தார் இயக்குநர் ருத்ரய்யா. ஒரு நாவலைப் படமாக்குவார்கள் பலரும். இவர், ஒரு படத்தையே நாவலாக்குகிற லாவகத்தை மிக நேர்த்தியாகச் செய்திருந்தார்.

அளவெடுத்த வசனங்கள், எங்கே தேவையோ அங்கே வெளிச்சம், மற்றபடி இருட்டு, என்னவிதமான இயல்பான உடைகளோ அவைதான் எல்லோருக்கும். கேமரா நகர்வது கூட யாரோ ஒருவர் பார்க்கிற பிரமையைத்தான் ஏற்படுத்தின. இத்தனை நேர்த்திமிக்க படைப்பை, ஒரு கல்லைக் கொண்டு சிற்பி செதுக்கும் சிலையென, செதுக்கித் தந்தார் ருத்ரய்யா.

1978-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அப்போது பார்த்தவர்கள் மிகமிகக் குறைவுதான். ஆனால், அந்தப் படத்தை 44 வருடங்கள் கழித்தும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ரசிகர்கள்; பத்திரிகையாளர்கள்; விமர்சகர்கள்; திரையுலகத்தினர்! இதுதான் ருத்ரய்யா எனும் கலைஞனுக்குக் கிடைத்த வெற்றி.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகத்தான் இருந்தார் ருத்ரய்யா. இந்த முறை ‘கிராமத்து அத்தியாயம்’ எழுதினார். ஆனால் படம் எடுத்து பாதியிலேயே நின்றது. கமலைச் சந்தித்தார். கமல் பஞ்சு அருணாசலத்திடம் அழைத்துச் சென்றார். அவர்களின் உதவியால், ‘கிராமத்து அத்தியாயம்’ உருவானது.

’அவள் அப்படித்தான்’ படத்தில் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலுக்கு நடிகர் சிவச்சந்திரன் பியானோ வாசிப்பார். அந்தக் காட்சிக்கு பியானோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று ருத்ரய்யா நினைத்ததைச் சொல்ல, வாடகைக்கு எடுக்கப் பணமெல்லாம் இல்லை. உடனே ஓடிப்போய், தன் நண்பனின் வீட்டிலிருந்த பியானோவை வண்டியைப் பிடித்து எடுத்து வந்து கொடுத்தார் சிவச்சந்திரன். இதை சிவசந்திரனே என்னிடம் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

‘பன்னீர் புஷ்பங்களே’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலில் வருகிற இருளைக் கொண்டே கதையின் கனம் சொல்லும் வித்தை ருத்ரய்யாவுக்கு உண்டு. ‘கிராமத்து அத்தியாயம்’ படமும் புதிய முயற்சிதான். ஆனால், இந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை. இருப்பினும் இளையராஜாவின் இசையால், இன்னமும் இந்தப் படம் ஜீவனுடன் இருக்கிறது. ‘பூவே இது பூஜைக்காலமே...’ என்ற பாடலைக் கேட்டுப்பாருங்கள் சொக்கிப் போவீர்கள். படமாக்கப்பட்டது கவிதை மாதிரி ஜில்லென்றிருக்கும். இதில், ‘ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது’ என்ற பாடல், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்றைக்கும் கிராமத்துப் பேருந்துகளில், லாரிகளில், டூரிஸ்ட் கார்களில், இந்தப் பாடலைக் கேட்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் படத்தை எடுக்கலாம் என்று நினைக்காமல், ஜிகினா தொழிற்சாலைக்குள் நிஜம் சொல்ல ஆசைப்பட்ட உன்னதக் கலைஞன் ருத்ரய்யா! ஒளியின் இருட்டிலும் ஒலியின் மெளனத்திலும் கூட கதை சொன்ன வித்தகன்.

‘அவள் அப்படித்தான்’ வெளியான நாளில் எனக்குப் பத்து வயது. முதல் நாளன்று இந்தப் படத்தைப் பார்க்கிற போது நல்ல கூட்டம் இருந்தது. இரண்டாவது மூன்றாவது வாரங்களில் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு, அடுத்த வருடத்தில் என் 11-வது வயதில், திருச்சி பொன்மலை ரயில்வே சினிமா தியேட்டரில், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘மஞ்சு’வுக்காக அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தேன்.

ஒரு வேலையாக சென்னைக்கு வந்தபோது, சித்ரா டாக்கீஸில் இரண்டு நாள் மூன்று நாள் ஷிப்டிங் படமாக, காலைக் காட்சி போட்டிருந்தார்கள். சென்னையில் இருந்த இரண்டு நாளும் சென்று பார்த்தேன். அதேபோல் இன்றைய விஜய் டிவி, அப்போது ஜிஇசி எனும் சேனலாக இருந்தது. அதில் ‘அவள் அப்படித்தான்’ ஒளிபரப்பாகும் விளம்பரம் பார்த்துவிட்டு, அன்றைக்கு வேலைக்குப் போகாமல் லீவு போட்டுவிட்டுப் பார்த்தேன். அன்றைக்கு மஞ்சுவுக்காக மட்டுமே அழுதவன், அடுத்தடுத்துப் பார்க்கிற போது, ருத்ரய்யாவுக்காகவும் அழுததுதான் சோகம்!

1947-ம் ஆண்டு, ஜூலை 25-ம் தேதி பிறந்த ருத்ரய்யா, 2014-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி தனது 67-வது வயதில் மறைந்தார். சக மனிதர்களைப் பாராட்டுகிற மனம் இங்கே குறைவுதான். குறிப்பாக, கலைஞர்களை மறைவுக்குப் பிறகுதான் ஆராதிக்கத் தொடங்குகிறோம்.

அன்றைக்கு ‘அவள் அப்படித்தான்’ வெளியான போது படத்தையும் ருத்ரய்யாவையும் கொண்டாடத் தவறினோம். இன்றைக்கு ‘அவள் அப்படித்தான்’ படம் பார்க்கிற விஷயத்தை மையப்படுத்திய படங்களே வந்துவிட்டன. ருத்ரய்யா பிறந்து 75 வருடங்களாகின்றன. இறந்து எட்டு வருடங்களாகின்றன. ‘அவள் அப்படித்தான்’ உருவாக்கி, 44 வருடங்களாகின்றன. 75 ஆண்டுகளானாலும் ‘அவள் அப்படித்தான்’ படத்தையும் ‘மஞ்சு’வைப் பற்றியும் யாரோ பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும், அழுதுகொண்டுமாக இருப்பார்கள். ’ஒருசோறு பதம்’ என்போம். ‘அவள் அப்படித்தான்’ அப்படித்தான்!

கமர்ஷியலுக்குள் சிக்காதவர் ருத்ரய்யா. ‘அவள் அப்படித்தான்’ தந்த ருத்ரய்யாவும் அப்படித்தான்!

- இயக்குநர் ருத்ரய்யா நினைவுதினம் இன்று

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in