விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் அளிக்க மறுப்பு!

மாநில தேர்தல் ஆணையம் சொன்ன காரணம்?
நடிகர் விஜய்
நடிகர் விஜய்hindu கோப்பு படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விதமாக தங்களுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை, மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பல்வேறு ஊர்களில் பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் விஜய்யை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில், வர இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், ‘இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளது. ஆட்டோ சின்னம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் அல்லது வெவ்வேறிடங்களில் வெவ்வேறு சின்னங்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in