‘பொன்னி நதி பார்க்கணுமே’ - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்: இன்று ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீடு!

‘பொன்னி நதி பார்க்கணுமே’ - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்: இன்று ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீடு!

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, கமல், ரஜினி போன்ற பிரபலங்களின் பங்கேற்பில் இன்று நடக்கவிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கவும் பாடல்களை ரசிக்கவும் ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் இறங்கி பல்வேறு காரணங்களால் பின்வாங்கிவிட்டனர். இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோரின் துணையுடன் இயக்குநர் மணிரத்னம் இப்படத்தை எடுக்க முடிவெடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான முயற்சியை அவர் தொடங்கியிருந்தாலும், சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. பின்னர் ‘பாகுபலி’ போன்ற படங்களின் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் இந்தப் படத்தை அவர் தொடங்கினார்.

மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. படத்தின் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன் 1’ டீஸரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். படத்தின் பாடல்களை மேடையில் இசைத்துக்காட்டவிருக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழு. இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in