'வாரிசு' படப்பிடிப்பில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: விஜய் மன்ற நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு

'வாரிசு' படப்பிடிப்பில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: விஜய் மன்ற நிர்வாகி உள்பட 7 பேர்  மீது வழக்கு

'வாரிசு' படப்பிடிப்பின்போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விஜய் மன்ற நிர்வாகி உள்பட ஏழு பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா உட்பட பலர் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் செய்தியாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அனுமதியின்றி யானைகளைப் படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதே இந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து போலீஸார் அங்கு விரைந்து சென்று, தாக்குதல் நடத்தியவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in