முந்தும் ‘துணிவு’; பின்தங்கும் ‘வாரிசு’: ரசிகர்களை உசுப்பேற்றும் ‘தியேட்டர் அப்டேட்’

முந்தும் ‘துணிவு’; பின்தங்கும் ‘வாரிசு’: ரசிகர்களை உசுப்பேற்றும் ‘தியேட்டர் அப்டேட்’

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்களின் வெளியீடு தொடர்பான புள்ளிவிபரங்களை முன்வைத்து, யார் மாஸ் என்பதில் இருதரப்பு ரசிகர்களும் புதிய மோதலை தொடங்கியிருக்கிறார்கள்.

வரும் பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மற்றுமொரு தீபாவளியை கொண்டாட தயாராகிறார்கள். வாரிசு - துணிவு என இரு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒருசேர வெளியாவது பரஸ்பரம் ரசிர்களை பட்டாசாய் பற்ற வைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரது படங்களும் நேரிடையாக மோதுவதால், தங்கள் நட்சத்திரத்தின் புகழ் பாடுவதோடு எதிர் தரப்பை சதாய்ப்பதிலும் இவர்கள் வேகம் காட்டுகிறார்கள். அந்த வகையில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள திரைப்படங்களுக்காக இப்போதிருந்தே கச்சைக்கட்டுகிறார்கள்.

திரைப்படம் தொடர்பாக படக்குழு அளிக்கும் அப்டேட்டுகளுக்கு அப்பால், திரையுலக நடப்புகளை கண்காணிக்கும் துறை வல்லுநர்கள் பொதுவெளியில் தெரிவிக்கும் தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக இன்று காலை வெளியான, துணிவு - வாரிசு திரைப்படங்களுக்காக ஒதுக்கப்படும் திரையரங்குகளின் உத்தேச எண்ணிக்கை குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

திருச்சி - தஞ்சை டெல்டா வட்டாரத்தை பொறுத்தவரை துணிவு திரைப்படத்துக்கு 60, வாரிசு படத்துக்கு 45 என திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் இன்றைய(நவ.28) தினத்தின் ரசிகர் மோதலுக்கு தீனி தந்திருக்கிறது. துணிவு படத்துக்கு அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் ’தல’தான் மாஸ் என கொண்டாடும் அஜித் ரசிகர்கள் கையோடு விஜய் தரப்பையும் சீண்டி வருகிறார்கள். இதற்கு பதிலடி தரும் விஜய் ரசிகர்கள் திரைப்படங்களின் வெற்றியை தீர்மானிக்கும் மதுரை மற்றும் சென்னை வட்டாரங்களில், வாரிசு படத்துக்கே அதிக திரையரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கள நிலவரங்கள் என்ற அடிப்படையில் தாமாக சில புள்ளி விபரங்களை அடுக்கிறார்கள்.

சமூக ஊடகவெளியில் இவ்வாறு மோதுபவர்கள், ரசனையும் ரகளையுமான மீம்ஸ் வாயிலாகவும் தங்கள் உரசலை முன்னெடுக்கிறார்கள். இன்னும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், பிரத்யேக ’ஃபேன் மேட்’ வீடியோக்களிலும் தங்களது அஸ்திரங்களை தீர்மானிக்கிறார்கள். இணையவெளிக்கு அப்பால் போஸ்டர்கள், கட் அவுட் என இப்போதிருந்தே இருதரப்பு ரசிகர்களும் மாஸ் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியாரும், வாரிசு படத்துக்காக நடிகர் சிம்புவும் தலா ஒரு பாடல் பாடியிருப்பதும் ரசிகர்களின் இந்த கொண்டாட்டங்களில் அங்கமாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in