‘உங்கள் இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்!’

அமித் ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
‘உங்கள் இந்தித் திணிப்பை  எதிர்க்கிறோம்!’

இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ’பிற மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்குள் உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். பாரதிதாசன் எழுதிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையில் இடம்பெறும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளைச் சுட்டிக்காட்டிப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’உள்துறை அமைச்சரே உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் தாய்மொழியையும் அடையாளத்தையும் நேசிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in