‘உடனிரு எந்நாளும்...’ - மனைவியின் நினைவுதினத்தில் அருண்ராஜா உருக்கம்!

‘உடனிரு எந்நாளும்...’ - மனைவியின் நினைவுதினத்தில் அருண்ராஜா உருக்கம்!

‘ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரெமோ' உள்ளிட்ட படங்களில் நடிகர், 'தெறி', 'கபாலி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியர் மற்றும் பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். 2018-ல் 'கனா' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இயக்குநராக தனது இரண்டாவது படமாக 'ஆர்ட்டிகிள் 15' இந்திப் படத்தின் ரீமேக்காக 'நெஞ்சுக்கு நீதி' படத்தை அருண்ராஜா அறிவித்தார். இந்தப் படத்திற்கான வேலைகள் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோதுதான் கரோனா பெருந்தொற்று மிகத் தீவிரமாகப் பரவியது. இதில் அருண்ராஜாவும் அவரது மனைவி சிந்துஜாவும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்துஜா காலமானார். அவர் இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் அருண்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படங்களைப் பகிர்ந்து,

உடனிரு எப்போதும் உடைந்திடாத உண்மையாய்

உடைத்திடாத மென்மையாய்

ஏதேதோ எண்ணங்கள் என்னைச்சூழ

நீயே அரணாய் எனை ஆள

உடனிரு எந்நாளும் பாப்பி!

என நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அருண்ராஜாவின் இந்தப் பதிவிற்குப் பாடகி சைந்தவி, 'சிந்துஜா எப்போதும் உங்களுக்கு ஒரு தேவதையாக துணையிருப்பார். உறுதியாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதேபோல நடிகர் பிரசன்னா, ‘அவர் இறந்து அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. அவர் எப்போதும் உனக்கு துணையாக இருப்பார். உறுதியாக இரு' என்று தெரிவித்துள்ளார். அருண்ராஜாவின் தோழியும் தொகுப்பாளருமான டிடி, 'தயவுசெய்து உறுதியாக இரு. அவர் எப்பொழுதும் உனக்கு துணையாகவும் காக்கவும் செய்வார்' என்று தெரிவித்துள்ளார்.

திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களும் அருண்ராஜாவை ஆற்றுப்படுத்தும் வகையில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் எழுதிவருகின்றனர்.

‘இருவரும் மீண்டுவிடுவோம் என்றே நினைத்தேன்!’

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தது குறித்து அருண்ராஜா தனது சமீபத்திய பேட்டிகளில் குறிப்பிடும்போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டபோது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 15 நாட்கள் மருத்துவமனையில் நன்றாக ஓய்வெடுத்து சீக்கிரமே குணமடைந்து திரும்பிவிடுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் மனைவியின் மரணம் நான் எதிர்பார்க்காதது. நானும் அவரும் இணைந்து பார்த்த முதல் திரைப்படம் 'ஆர்ட்டிகிள் 15' தான். எங்களுக்குப் பிடித்த படத்தை நான் தமிழில் இயக்குவதைப் பார்த்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவரும் ஒரு உதவி இயக்குநர் போலதான் 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் செயல்பட்டார். அவர் இழப்பில் இருந்து இன்னும் மீளவில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in