
கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயர் கனடா மக்களுக்கு அமைதி, வளம், மகிழ்ச்சி ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கும் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டில் உள்ள பிரபலங்களின் பெயர்களைத் தெரு, மருத்துவமனை என பொதுப் பயன்பாட்டில் உள்ள இடங்களுக்குப் பெயர் சூட்டுவது வழக்கம். மற்ற நாட்டில் உள்ள பிரபலங்களைக் கௌரவிக்கும் வகையில் அரிதாக அவ்வப்போது பெயர் சூட்டும் நிகழ்வுகளும் நடைபெறும். அந்த வகையில் இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் பெயர் கனடாவில் உள்ள தெருவிற்குச் சூட்டப்பட்டுள்ளது. இதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கனடாவில் உள்ள மார்கம் என்ற நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு என்னுடைய பெயரைச் சூட்டுவார்கள் எனக் கனவிலும் நான் நினைக்கவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் என்பது என்னுடைய பெயர் இல்லை. அதன் அர்த்தம் இரக்கம். இரக்கம் என்பது நம் எல்லோருக்கும் பொதுவான கடவுளின் குணம். இந்த பெயர் கனடா மக்களுக்கு அமைதி, வளம், மகிழ்ச்சி ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கும். இது எனக்கு மேலும் பணிபுரிய வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தெரிவித்துள்ளார்.