மகன் அமீன் உடன் ஏ.ஆர்.ரஹ்மான் -‘பத்து தல’ பாடலுக்காக இணைகிறார்கள்!

மகன் அமீன் உடன் ரஹ்மான்
மகன் அமீன் உடன் ரஹ்மான்

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ஒரு பாடலுக்காக, மகன் அமீன் உடன் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக இணைந்து தோன்றுகிறார்.

பிகில் திரைப்படத்தின் ’சிங்கப்பெண்ணே’ பாடல் உட்பட ஒரு சில படங்களின் பாடல் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் தலைகாட்டியிருக்கிறார். தற்போது முதன்முறையாக, இசைத்துறையில் வளர்ந்து வரும் மகன் அமீன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தின் பாடல் புரமோஷனுக்காக பங்கேற்று வருகிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் சிம்புவின் ‘பத்து தல’ படத்துக்கான ’நம்ம சத்தம்’ பாடலுக்கான லிரிக் வீடியோ 2 வாரங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பு பெற்றது. ’பத்து தல’ படத்துக்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், ’நம்ம சத்தம்’ பாடலையும் பாடியுள்ளார். அந்த வகையில் அதற்கான லிரிக் வீடியோவிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தார்.

படப்பிடிப்பில் அமீன் - ரஹ்மான்
படப்பிடிப்பில் அமீன் - ரஹ்மான்

அதன் தொடர்ச்சியாக ’பத்து தல’ படத்தின் இன்னொரு பாடல் புரமோஷனுக்கான வீடியோவில், மகன் அமீன் உடன் ஏ.ஆர்.ரஹ்மான் பங்களிக்கிறார். அண்மையில் அதற்கான படப்பிடிப்பு சென்னை அரங்கம் ஒன்றில் விமரிசையாக நடைபெற்றது. முதன்முறையாக மகனுடன் இணைந்து தோன்றுவதால், ஏ.ஆர்.ரஹ்மான் உற்சாகமாக தனது பங்களிப்பை வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

மார்ச் 30 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ’பத்து தல’ திரைப்படத்தில் சிலம்பரசனுடன், கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா, பத்து தல படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in