
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, தமிழ், கன்னடத்தை அடுத்து தெலுங்கில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இப்போது ஹீரோவுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே, சேவகன், பிரதாப், தாயின் மணிக்கொடு, ஜெய்ஹிந்த் 2 உட்பட பல படங்களை இயக்கியுள்ள அவர், இப்போது மீண்டும் இயக்குநர் ஆகிறார். தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
விஷ்வக் சென் நடித்து சமீபத்தில் வெளியான ’அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் அர்ஜுன், விஷ்வக் சென் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இந்தப் படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவை, நாயகியாக நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அவரை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறார்.
தெலுங்கு படம் என்றாலும் இதை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளார். அர்ஜுன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ள விஷ்வக் சென், அடுத்த மாதம் பூஜை நடக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், விஷாலின் ’பட்டத்து யானை’ மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்து தமிழ், கன்னடத்தில் உருவான ’சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.