சூர்யாவுடன் ‘கஜினி 2’ படத்தில் இணையும் ஏ.ஆர். முருகதாஸ்?

சூர்யாவுடன் ‘கஜினி 2’ படத்தில் இணையும் ஏ.ஆர். முருகதாஸ்?

நடிகர் சூர்யாவுடன் ‘கஜினி 2' படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்த ‘கஜினி’ திரைப்படம் 2005-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கடுத்து இவரும் சூர்யாவும் இணைந்த திரைப்படமான ‘ஏழாம் அறிவும்’ திரைப்படமும் வெற்றிப் பெற்றது. இதனை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ்ஸூம் நடிகர் சூர்யாவும் மீண்டும் ‘கஜினி2’ படத்திற்காக இணைவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில், ’கஜினி2’ படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிப் பெறாத காரணத்தால் நடிகர் விஜய்யை மீண்டும் அவர் இயக்கும் வாய்ப்பு நழுவி, அது இயக்குநர் நெல்சன் கைவசம் போனதாக அப்போது தகவல் பரவியது.

அதற்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் ‘துப்பாக்கி 2’ படத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், தற்போது ‘கஜினி2’-க்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தகவல் உறுதியானால் இதுகுறித்தான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவுடன் ‘சூர்யா42’, இயக்குநர் பாலாவுடன் ‘வணங்கான்’, வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதுபோக, ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேலுடன் மீண்டும் ஒரு படம், லோகேஷ் கனகராஜூடன் ‘விக்ரம் 3’, எழுத்தாளர் சு. வெங்கடேசனுடன் இணையும் வரலாற்று கதை, தயாரிப்பாளராக இந்தி ‘சூரரைப்போற்று’ என பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in