`தணிக்கை குழுவிடம் மேல்முறையீடு செய்யவும்'‍ `யானை' படத்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

`தணிக்கை குழுவிடம் மேல்முறையீடு செய்யவும்'‍ `யானை' படத்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

யானை படத்துக்கான சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழு முன் மேல்முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், யானை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதால், மீனவர்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் எனவும், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் மீனவ சமுதாய மக்களை புண்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தீர்களா? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தணிக்கை சான்றை எதிர்த்து தணிக்கை குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in