நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு அவமரியாதை செய்ய நினைக்கவில்லை: மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு அவமரியாதை செய்ய நினைக்கவில்லை: மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருப்பதி கோயிலில் செருப்பு அணிந்து சென்ற விவகாரம் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. ஏற்கெனவே திருப்பதியில் திருமணம் நடத்த இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு 150 விருந்தினர்கள் வரை கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடித்த கையோடு இருவரும் திருப்பதிக்குச் சென்று வழிபட்டனர். இந்நிலையில், திருப்பதியில் காலணிகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட இடத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து போஸ்ட் வெட்டிங் சூட்டில் கலந்துகொண்டது சர்ச்சைக்குள்ளானது.


ஏழுமலையான் கோயில் முன் உள்ள பகுதிகளில் காலணியுடன் நயன்தாரா போட்டோ ஷுட்டில் ஈடுபட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " எங்களுடைய திருமணத்தை நாங்கள் திருப்பதியில் நடத்தவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், சில நிர்வாக காரணங்களால் எங்களுடைய திருமணத்தை திருப்பதியில் நடத்த முடியாததால் சென்னையில் நடத்தினோம். திருமணம் முடிந்த கையோடு மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதிக்கு சுவாமி கல்யாணம் பார்ப்பதற்காகவும், கடவுளின் ஆசிர்வாதம் பெறுவதற்காகவும் வந்தோம். அந்த அளவுக்கு எங்களுக்கு கடவுளின்மேல் மிகுந்த பக்தி உள்ளது.

சிறப்பான தரிசனம் கிடைத்தது. அந்த நாளை மறக்க முடியாத தருணமாக மாற்றும் வகையிலும், எங்களுடைய திருமணம் முழுமையடைந்ததாக உணரும் வகையிலும் திருப்பதி கோயிலுக்கு வெளியே இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்போது, அங்கு ஏற்பட்ட கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்தோம். அந்த அவசரத்தில் நாங்கள் காலில் செருப்பு அணிந்திருப்பதை அறியாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் கோயிலுக்குத் தவறாமல் சென்றுவருபவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள். எங்களுடைய திருமணத்தை திருமலையில் நடத்துவதற்காக கடந்த 30 நாட்களில் 5 முறை வந்து சென்றுள்ளோம்.

எங்களுடைய செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு அவமரியாதை செய்ய நினைக்கவில்லை. எங்களுடைய இந்த சிறப்பான நாளில் வாழ்த்து மற்றும் அன்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in