இந்தி தேசிய மொழியா என அஜய் தேவ்கன், சுதீப் விவாதிக்கட்டும்... அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்தி தேசிய மொழியா என அஜய் தேவ்கன், சுதீப் விவாதிக்கட்டும்... அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

‘பாகுபலி’ வரிசைப் படங்கள், ‘புஷ்பா, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்-2’ என தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் பான் இந்தியா படங்களாக, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களைச் சென்றடைந்திருக்கின்றன. வசூல் ரீதியிலும் வரலாறு படைத்திருக்கின்றன. இதையடுத்து தென்னிந்தியத் திரைப்படங்களின் ‘எல்லை தாண்டிய’ வெற்றி குறித்து பாலிவுட் திரையுலகத்திலும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

இந்தச் சூழலில், ‘ஆர்: தி டெட்லியஸ்ட் கேங்க்ஸ்டர் எவர்’ எனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய கன்னட நடிகர் சுதீப் (’நான் ஈ’ புகழ்), ‘கேஜிஎஃப்-2’ திரைப்படம் வட இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றதைப் பற்றி வேறொருவர் பேசியதைத் திருத்தும் விதமாக, “எல்லோரும் ஒரு கன்னடப் படம் பான் இந்தியா அளவுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகப் பேசுகிறார்கள். ஆனால், அதில் ஒரு சிறிய திருத்தம்... இந்தி நமது தேசிய மொழி அல்ல” என்றார்.

மேலும், தமிழ், தெலுங்கு மொழிகளில் பாலிவுட் தயாரிப்பாளர்களும் பான் இந்தியா படங்களை வெளியிடத்தான் செய்கிறார்கள் என்றும், அவை அந்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லை என்றும் கூறிய சுதீப், “நாம் இன்றைக்கு எல்லா பகுதிகளையும் சென்றடையும் வகையிலான படங்களை எடுக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

சுதீப்பின் வார்த்தைகள் பாலிவுட் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ‘சகோதரர் கிச்சா! உங்களைப் பொறுத்தவரை இந்தி நமது தேசிய மொழி அல்ல; அப்படியென்றால் ஏன் உங்கள் தாய்மொழியில் எடுக்கும் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி இதற்கு முன்பும், எப்போதும் நமது தாய்மொழி; தேசிய மொழி. ஜன கண மண’ என இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் சுதீப், தான் வேறொரு கோணத்தில் அப்படிப் பேசியதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். யாரையும் காயப்படுத்தவோ, கோபப்படுத்தவோ அல்லது விவாதத்தைக் கிளப்பும் வகையிலோ அதைச் சொல்லவில்லை என்றும் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார். நாட்டின் எல்லா மொழிகளையும் நேசிப்பதாகவும், அஜய் தேவ்கனை விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதேசமயம், இறுதியாக எழுதிய ட்வீட்டில், ‘நீங்கள் இந்தியில் அனுப்பிய கருத்தை நான் புரிந்துகொண்டேன். ஏனென்றால், நாம் அனைவரும் இந்தியை மதித்து, நேசித்து கற்றுக்கொண்டோம். தவறாக நினைக்க வேண்டாம் சார்! ஆனால், எனது எதிர்வினை கன்னடத்தில் டைப் செய்யப்பட்டிருந்தால் சூழல் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்த்தேன். நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தானே சார்!’ என்று சற்றே குத்தலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில், இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான். அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் வழக்கமாக வட இந்தியர்களில் பலர் சொல்வது போலவே இந்தியை தேசிய மொழி என்றே அஜய் தேவ்கன் நிறுவ முயல்கிறார். சுதீப் அதற்கு, மிக மென்மையாக, நாகரிகமாகவே பதிலடி கொடுத்திருக்கிறார். எனினும், அவரும் இந்தி அலுவல் மட்டும்தான் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியில் இந்தி அலுவல் மொழி என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்சி மொழி என்றோ தேசிய மொழி என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in