எங்கள் வலிமையை சட்டசபையும் அறியும்: அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டிஸ் ஆரம்பம்

எங்கள் வலிமையை சட்டசபையும் அறியும்: அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டிஸ் ஆரம்பம்

ஏகே என்கிற அஜித்குமார் தலயால் அடித்துகொண்டாலும் அவரது ரசிகர்கள் கேட்பதாக இல்லை. அதிலும் பொங்கலுக்கு தீபாவளி கொண்டாடும் மூடில், வலிமை திரைப்படத்தின் தரிசனத்துக்கு தயாராகி வருகிறார்கள். ஒமைக்ரானுக்கு போட்டியாய் பரவி வருகிறது அஜித் ரசிகர்கள் ஆர்வங்களும் அதையொட்டிய கோளாறுகளும்.

அலைபேசியில் இருக்கும் போட்டோ எடிட்டிங் செயலிகளைக் கொண்டே சமூக ஊடகங்களை கதறடித்து வரும் ரசிகக் கண்மணிகள், வழக்கமான போஸ்டர்கள் பேனர்களை விட்டுவைப்பார்களா? ஊருக்கு ஊர் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் சில ரசிகர்கள் சேர்ந்து தெரு நீளத்துக்கு பேனர் நிலை நிறுத்தி உள்ளார்கள். திருமங்கலத்தில் அஜித் முகத்தை தேடும் அளவுக்கு பேனர் கொள்ளாது ரசிகர்களின் முகங்கள் பளீரிடுகின்றன.

மதுரையைப் பற்றி சொல்லவா வேண்டும்? பெரும்பாலான பேனர்களில், வலிமை ட்ரெய்லரில் இருந்து தேற்றிய முத்திரை வசனங்களால் நிரப்பி உள்ளனர். ’இந்த பொல்லாத உலகத்திலே வெள்ளை மனம் கொண்டவரே’ என அஜித்தின் பால் முகத்துடனான பேனரை தூங்கா நகரத்தின் அஜித் ஃபேன்ஸ் நிறுத்தி உள்ளனர். இன்னொரு பிரமாண்ட பேனரில் ’மனிதக் கடவுளை தரிசிக்க வருகை தரும் பக்தர்களை தேசிய நாயகன் அஜித் ரசிகர்கள்’ வரவேற்கிறார்கள்.

தூங்கா நகரின் அஜித் ரசிகர்கள் நிறுத்திய பேனரில் அரசியல் வாடை அதிகம். ’எங்களின் வலிமையை பட்டி தொட்டியும் தெரியும் சட்டசபையும் அறியும்’ என்று குன்ஸாக தீட்டிய வாசகங்களுடன், அருகில் முதல்வராக அஜித் குமாரும் வீற்றிருக்கிறார். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகமும் அதனருகில் வைத்திருக்கிறார்கள். ரசிகர் மன்றமே வேண்டாமென்று அமைதி காக்கும் அஜித்தை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்களின் நம்பிக்கைக்கு விருது ஏதேனும் அறிவிக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in