வெள்ளித்திரையில் இன்னொரு எம்ஜிஆர்!

’உழைக்கும் கைகள்’ படத்தில் நாமக்கல் எம்ஜிஆர்...
’உழைக்கும் கைகள்’ படத்தில் நாமக்கல் எம்ஜிஆர்...

எம்ஜிஆர் வேடமிட்டு அவரது ரசிகர்களை ஆடி, பாடி மகிழ்வித்த நாமக்கல் எம்ஜிஆர் இப்போது வெள்ளித்திரைப் பக்கமும் வந்துவிட்டார். எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘விவசாயி’ படத்தை இப்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப ‘உழைக்கும் கைகள்’ என்னும் பெயரில் திரைப்படமாக இயக்கி, எம்ஜிஆர் தோற்றத்திலேயே நடிக்கவும் செய்திருக்கிறார் நாமக்கல் எம்ஜிஆர்.

‘உழைக்கும் கைகள்’ தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நாமக்கல் எம்ஜிஆர் நம்மிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உழைக்கும் கைகள் படத்தில்...
உழைக்கும் கைகள் படத்தில்...

”எம்ஜிஆர் என்றால் சின்னவயதில் இருந்தே எனக்கு உயிர். அவருடைய பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடுவது என்றால் கொள்ளைப் பிரியம். பலநாடுகளுக்கும் சென்று எம்ஜிஆர் வேடமிட்டு ஆடியிருக்கிறேன். அவர் பாடலுக்கு அபிநயம் பிடித்து தத்ரூபமாக அவரைப் போலவே ஆடுவேன். அப்படி ஆடி, யூடியூப் தளத்திலும் வெளியிடுவது வழக்கம். யூடியூப்பில் அதைப் பார்த்த ரசிகர்கள் பலர், நீங்கள் ஏன் எம்ஜிஆர் வேடத்திலேயே ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அப்படித்தான் தேவர் பிலிம்ஸின் 'விவசாயி' படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்னும் ஆசை வந்தது. அந்தப் படத்தில் விவசாயிகள்படும் வேதனைகளையும், வலியையும் புரட்சித்தலைவர் அவ்வளவு அழகாக பதிவு செய்திருப்பார்.

எம்ஜிஆர் ரசிகர்களும் அந்தப்படத்தை விரும்பியதால் 'விவசாயி' படத்தின் ரீமேக் உரிமையை தேவர் பிலிம்ஸின் தண்டாயுதபாணியிடம் கேட்டேன். அவர் காசே வாங்காமல் படத்தை ரீமேக் செய்துகொள்ள அனுமதி கொடுத்தார். நானும், இந்தப்படத்தில் கிடைக்கும் லாபத்தை ஏழைக்குழந்தைகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பிரித்துக்கொடுக்க இருப்பதாகச் சொன்னேன். அவரும், எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க சரியான நபர் என நெகிழ்ந்துபோய் சொன்னார்.

'விவசாயி' படத்தையே, இப்போதுள்ள விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினைகளையும் சேர்த்து ‘உழைக்கும் கைகள்’ ஆக்கியிருக்கிறேன். பழைய பாடல்கள், அதே டி.எம்.எஸ் ஐயா குரலோடு அப்படியே வரும். இசை மட்டும் இப்போதைய காலத்திற்கு தகுந்தவாறு சேர்த்திருக்கிறேன்” என 'உழைக்கும் கைகள்' உருவான கதையைச் சொன்னார் நாமக்கல் எம்ஜிஆர்.

தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களின் மூலம் அங்கெல்லாம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்பிலும் இருக்கிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்! இவரைப்பற்றி பலருக்கும் தெரியாத இன்னொரு ரகசியமும் இருக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உடன்பிறந்த சகோதரி சிவகுமாரியைத்தான் இவர் திருமணம் செய்திருக்கிறார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய நாமக்கல் எம்ஜிஆர், “ ;உழைக்கும் கைகள்' படத்தின் பெரும்பகுதி காட்சிகளைக் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடுத்தோம். ஷூட்டிங்கின் போதே எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கும் என்னைப் பார்த்துவிட்டு ஏராளமான கிராமப்புற ரசிகர்கள் வந்துவிட்டார்கள். 20 நாள்கள் குற்றாலத்தில் ஷூட்டிங் எடுத்தோம். அப்போது தினமும் மாலையில் ஒரு மணி நேரம் அப்பகுதி மக்களின் போட்டோ ஷூட்டுக்காக ஒதுக்கிவிடுவேன்” என்று சொல்லிச் சிரித்தார்.

நாமக்கல் எம்ஜிஆருக்கு இப்போது 64 வயது. ஆனாலும் எம்ஜிஆர் கெட்டப் போட்டாலே நம்மையும் அறியாமல் நமக்குள் எனர்ஜியும், இளமையும் ஊற்றெடுக்கும் என்றுசொல்லும் அவர், “ 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் காஷ்மீர் போயிருந்தார். அப்போது அவருக்கு 56 வயது. அவரிடம், ‘இன்னும் இளம்கதாநாயகனாக நடிக்கிறீர்களே...’ என நிருபர்கள் கேட்டார்கள். உடனே எம்ஜிஆர், ‘இளைஞன் முதியவராக நடிப்பது எளிது. ஆனால், ஒரு முதியவர் இளைஞனாக நடிப்பதற்கு நல்ல உடல்கட்டு வேண்டும். என் கடை வியாபாரம் ஆகும்வரை இருக்கும். என்னை ரசிக்கும்தன்மை நின்றுபோனால் நானே நடிப்பதை நிறுத்திவிடுவேன்’ என்று சொன்னார்.

எம்ஜிஆர் வேஷம் போடுவதால் அவரது குணமும் கொஞ்சம் எனக்குள் தொற்றிக் கொண்டது. மேடைநிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்குத்தான் கொடுத்து வருகிறேன். ஏழைப் பெண்களுக்கு சேலை, இலவச தையல்பயிற்சி வகுப்புகள், பள்ளிப் பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் என என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன்” என்கிறார்.

ரசிகர்களுடன்
ரசிகர்களுடன்

எல்லாம் சரி அந்த எம்ஜிஆரைப் போல இந்த எம்ஜிஆருக்கு அரசியல் ஆர்வம் உண்டா எனக் கேட்டதும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னவர், “எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பு எனக்கு அரசியல் ஆர்வமே போய்விட்டது. ஒருமுறை, கவுன்சிலராக இருந்தேன். அதுகூட சுயேச்சையாகத்தான். 1980-ல் எம்ஜிஆரின் ஆட்சி கவிழ்ந்த நேரம். அப்போது அவர் மேட்டூரில் செம்மலையின் இல்லத் திருமண விழாவிற்கு வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவரை கல்லூரிகளின் மாணவ பேரவைத் தலைவர்கள் 10 பேர் நேரில் போய் பார்த்தோம். எம்ஜிஆர் காலில் விழுந்து ஆசிவாங்கினோம். அப்போது என் தோளில் கைபோட்டு சிறிதுதூரம் நடந்துவந்தார் எம்ஜிஆர். கார் ஏறும்போது என்னுடன் கைகுலுக்கினார். அப்போது அவருக்கு 63 வயது எனக்கு 19 வயது. அவர் என் கையைப் பிடித்த பிடி என்ன வலி வலித்தது தெரியுமா? அத்தனை உடற்கட்டுடன் இருந்தவர் எம்ஜிஆர். அவரில் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்பதற்காக இன்று வரை நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஒரு படத்துடன் நின்றுவிடாமல் இன்னும் சில எம்ஜிஆர் படங்களையும் ரீமேக் செய்யும் முனைப்பிலும் இருக்கிறார் நாமக்கல் எம்ஜிஆர். அதுபற்றி நம்மிடம் பேசிய அவர், ”உழைக்கும் கைகளைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆசியாவில் ராஜூ’ என்னும் படத்திற்காக முப்பது நாடுகளில் படப்பிடிப்பு நடத்த தீர்மானித்திருக்கிறோம். மலேசியாவில் 25 நாள்கள் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெற்றிக்குப் பின்பு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்னும் படத்தை எடுக்க எம்ஜிஆர் திட்டமிட்டார். ஆனால் அது முடியாமல்போனது. நான் இப்போது ஆப்பிரிக்காவை மட்டும் ஆசியா என மாற்றி எடுத்துக் கொண்டிருக்கிறேன். எம்ஜிஆர் நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட தீர்மானித்து வேலை செய்துகொண்டிருக்கிறோம்.

மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடித்து பேரன், பேத்தி எடுத்துவிட்டேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக மேடைக் கலைஞனாக மட்டுமே இருந்த நான், தாத்தாவானதும் சினிமா கதாநாயகன் ஆகியிருக்கிறேன். எம்ஜிஆர் ரசிகர்களின் பேராதரவில் இந்த நாமக்கல் எம்ஜிஆரும் வெள்ளித்திரையில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவேன்” என்றார்.

எம்ஜிஆர் என்ற மகத்தான கலைஞன் மக்கள் மனங்களில் இன்றைக்கும் வாழ்கிறார் என்பதற்கு நாமக்கல் எம்ஜிஆரின் இந்த நம்பிக்கையே ஓர் உதாரணம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in