சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொள்வது அசட்டுத்தனம்!

‘காலங்களில் அவள் வசந்தம்’ அஞ்சலி நாயர் பேட்டி
அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர்

’நெடுநெல் வாடை’ படத்தில் அமுதா, ‘டாணாக்காரன்’ படத்தில் ஈஸ்வரி என தனது அழகான கண்களால் நடிப்பைக் கொட்டி, ரசிகர்களின் மனதில் டாட்டுவாக ஓட்டிக்கொண்டவர் அஞ்சலி நாயர். அவரது நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் நகைச்சுவை கலந்த காதல் படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. அவர்தானா இவர் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்தார். காமதேனுவுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களைக் கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா?

எனது சொந்த ஊர் கோட்டயம். அப்பா, அம்மா இருவருமே ராணுவ அதிகாரிகள். எனக்கு ஒரே அக்கா. அவளுட கப்பல் படையில் அதிகாரி. இதனால் எனக்கு சிறு வயது முதலே தைரியம் அதிகம். என்னையும் ராணுவத்தில் சேர வற்புறுத்தினாரகள். நான் முடியாது என்று கோபமாகச் சொல்லிவிட்டேன். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள் இல்லையா? அப்படித்தான் நான். அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் நாட்டைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளட்டும். நான் அவர்களைப் பார்த்துக்கொள்கிறேன்.

சினிமா ஆசைதான் ராணுவத்தில் சேரமுடியாமல் உங்களைத் தடுத்ததா?

சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இளங்கலையில் ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் முகநூலில் எனது புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதில் குறியாக இருப்பேன். அப்போது முகநூல் வழியாக தொடர்பு கொண்ட ஒருவர். “நண்பர்களாகச் சேர்ந்து ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கிறோம். அதில் அமுதா என்பது கதாநாயகியின் பெயர். அந்தப் பெயருக்கு ஏற்ற மாதிரியே நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்தால் ஆடிசனுக்கு வாருங்கள்” என்றார். அதன்பிறகு படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன் அழைத்து கதையும் எனது கதாபாத்திரத்தையும் சொன்னார். ரொம்பப் பிடித்துவிட்டது. அப்படித்தான் முதல் வாய்ப்பு அமைந்தது.

ஏற்கெனவே மலையாளத்தில் ஒரு அஞ்சலி நாயர், தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு அஞ்சலி இருக்கிறார். இதனால் பெயர் குழப்பம் வராதா... உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

எதற்காக மாற்ற வேண்டும். தற்போது தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறேன். அங்கே, பெயரை மாற்ற வேண்டும் என்றார்கள். நான் சம்மதிக்கவில்லை. அம்மா அப்பா எனக்கு அஞ்சலின்னு அழகான பேர் வச்சிருக்காங்க. அதுவே அழகாகத்தான் இருக்கிறது என்று சொல்லி மறுத்துவிட்டேன். சினிமாவுக்காகப் பெயரை மாற்றிக்கொள்வதுபோல் அசட்டுத்தனம் எதுமில்லை. மலையாள சினிமாவில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் அஞ்சலி நாயர். அவர் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் ஒரு பக்கம் இருந்துவிட்டுப்போகிறேன். இதுவரை மலையாளத்திலிருந்து வாய்ப்பு வரவில்லை. அப்படி வந்தாலும் என்னை அங்கே ‘நெடுநெல்வாடை’ அஞ்சலி நாயர் என்றுதான் குறிப்பிடுவார்கள்.

சாதியின் பெயரை இணைத்துக்கொள்ளும் பிரபலங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?

நேரடியாகக் கேட்கிறீர்கள்... மற்றவர்களைப் பற்றி சொல்வதைவிட நான் முதலில் மாற விரும்புகிறேன். அடுத்த முறை நாம் சந்திக்கும்போது அஞ்சலியை மட்டும் சந்திப்பீர்கள்.

சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்தாலும் எப்படி இவ்வளவு இயல்பாக நடிக்க முடிகிறது?

இயக்குநர்கள் தான் காரணம், நம்முடைய கேரக்டரை நமக்குச் சொல்லி, வசனங்களின் அர்த்தம் சொல்லிக்கொடுத்து, எப்படி நடக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் என்று அவர்கள்தானே நம்மை ஆட்டி வைக்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இதுவரை எனக்கு அமைந்த மூன்று இயக்குநர்களுமே சிறந்த திறமைசாலிகள். நடிக்கவைக்கத் தெரியாத இயக்குநரிடம் மட்டும் மாட்டிவிடக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.

‘டாணாக்காரன்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ ஆகிய இரண்டு படங்களிலுமே கதாநாயகர்களை, “வாடா... போடா...” என்று அழைக்கும்படி உங்களுக்குக் கதாபாத்திரம் அமைந்ததை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

வேறென்ன? கிஃப்ட்தான். ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபுவை டீசிங் செய்து என் காதலைச் சொல்வதுபோல் நடித்தேன். சில காட்சிகள்தான். ஆனால், அந்தப் படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு என்னை இன்ஸ்டாவில் பாராட்டு மழையில் நனைய வைத்துவிட்டார்கள். இப்போது “ராதேதான் படம் முழுவதும் ஆட்சி செய்கிறாள். நீ வாழ்ந்திருக்கிறாய்” என்று பாராட்டுகிறார்கள். என்னைக் கேட்டால், ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் கௌசிக் ராம் தான் அட்டகாசம் செய்திருக்கிறார் என்று சொல்வேன்.

அடுத்து என்ன படங்கள்..?

இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி யிருக்கிறேன். அதில் ஒன்றில் விஜய்சேதுபதி சாருடன் நடிக்கிறேன். அந்த இரண்டு படங்கள் பற்றி நான் சொல்வதைவிட படத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள். மூன்றாவதாக, ஒரு தெலுங்குப் படம். அதற்கான படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

நீங்கள் நன்றாகப் பாடுவீர்கள் என்று தெரிந்தது. பாடகி ஆகும் எண்ணம் உண்டா?

வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் பாடுவேன்.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் கதாநாயகன் பச்சை குத்திக்கொண்டிருப்பதை நீங்கள் விமர்சிக்கும் படியாக காட்சி வருகிறது. ஆனால், நீங்கள் நிஜமாகவே மதச் சின்னங்களை புறங்கையில் பச்சை குத்தியிருக்கிறீர்களே..?

ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் எல்லா மதச் சின்னங்களையும் கையில் டாட்டு ஆக்கியிருக்கிறேன். மதத்தின் பெயரால் நாம் என்றைக்குமே பிளவுபட்டிருக்கக்கூடாது. மதம் நாமே உருவாக்கிக் கொண்டது. கடவுள் உருவாக்கியது அல்ல. கடவுள் நம் அனைவரையும் அவரது குழந்தையாகத்தான் பார்க்கிறார். அப்படியிருக்கும்போது மதத்தின் பெயரால் வேற்றுமை பேசுவது கடவுளுக்கே எதிரானது. மதம் பற்றிய எனது புரிதல் இதுதான். எனது டாட்டு பற்றி எங்கே யார் எத்தனை முறை கேட்டாலும் இந்த பதிலைக் கூறிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in