'பாலிவுட் பாட்ஷா' படத்துக்கு இசை அமைக்கும் அனிருத்!

'பாலிவுட் பாட்ஷா' படத்துக்கு இசை அமைக்கும் அனிருத்!

பிரபல பாலிவுட் ஹீரோ படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் புணேவில் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது. பின்னர் ஷாருக், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார். அது முடிந்த பின் மும்பையில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

ஜவான் டீசரில் ஷாருக்கான்
ஜவான் டீசரில் ஷாருக்கான்

இந்தப் படத்துக்கு ’லயன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இதன் டைட்டிலை ஜூன் முதல் வாரம் படக்குழு அறிவிக்க இருக்கிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு ’ஜவான்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கூடவே மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதுபற்றி ட்விட்டரில், "கனவு நனவாகி இருக்கிறது. 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் படத்துக்கு இசை அமைக்கிறேன். சகோதரர் அட்லீயை நினைத்து பெருமையாக இருக்கிறது. இது எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும். எங்களை ஆசிர்வதியுங்கள்" என்று அனிருத் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in