நடிகர் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசர் நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது ’அனிமல்’. அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தந்தை-மகன் உறவுச்சிக்கலை ஆக்ஷன் கதைக்களத்துடன் இந்தப் படம் விளக்குகிறது. ’அர்ஜூன் ரெட்டி’ இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்கா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் விஜய்தேவரகொண்டாவின் தோற்றமும் ஆக்ஷன் சாயலும் இந்தக் கதையிலும் தெரிகிறது. மகனான ரன்பீருக்கு தன் தந்தை மீது பாசம் இருந்தாலும் அவரை அடித்து வளர்க்கும் கோபக்கார தந்தையாக அனில் கபூர் இருக்கிறார். அப்படி தன் மீது வெறுப்பு காட்டும் தந்தைக்காக ஒருவனை பழிவாங்க ஆக்ஷன் அவதாரத்தில் மாறுகிறார் ரன்பீர்.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 'அனிமல்' திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது.