
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் பிறந்த நாளான இன்று, ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறிவருகின்றனர்.
ஷங்கரின் ‘அந்நியன்’ திரைப்படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடல் மூலம் பாடகராக அறிமுகமாகிய ஆண்ட்ரியா, கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தின் டைட்டில் பாடலான ‘கற்க கற்க கல்லும் கற்க’ பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமடைந்தார். கல்லூரி காலம் முதலே கிரிஷ் கர்னாட்டின் மேற்பார்வையில் மேடை நாடகத்தில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியாவின் நடிப்புத் திறனை அறிந்துகொண்ட கௌதம் மேனன், ஆண்ட்ரியாவுக்கு ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார் ஆண்ட்ரியா. ஆனால், அதற்கு முன்னதாக மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த வி. பிரியா இயக்கிய ‘கண்டநாள் முதல்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா சிறு வேடத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் பிரசன்னா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், வானம், தாதா என 50-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பின்னணி குரல் கொடுப்பதிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் உள்ளிட்ட பட நாயகிகளுக்குக் குரல் கொடுத்துள்ளார்.
இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் தெரிவித்தார். அதிலிருந்து மனவுறுதியுடன் மீண்டெழுந்து தற்போது மீண்டும் நடிப்பு, பாடல் என்று அசத்த ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ள, ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகியுள்ளது. பல ரசிகர்கள் அந்தப் பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற இணையதளங்களில் வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.