
ஆந்திராவில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த ரசிகர்களின் பெற்றோர்களிடம் வீடியோ காலில் பேசி நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். அப்போது நடிகர் சூர்யா கண் கலங்கியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யாவுக்கு ஆந்திராவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் சூர்யா கடந்த 23-ம் தேதி தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைத்துக் கொண்டாடினார்கள்.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தின் நரசராவ்பேட்டை பகுதியில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர். மோபுரிவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாபட்லா மாவட்டம் ஜே.பங்களூரைச் சேர்ந்த சாய் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து இரவில் பேனர்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது பேனரில் இருந்த இரும்பு கம்பியானது மின்சாரக் கம்பியில் உரசியது. அதில் மின்சாரம் பாய்ந்து வெங்கடேஷ், சாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது.
இதனிடையே, உயிரிழந்த ரசிகர்களின் பெற்றோர்களிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் நடிகர் சூர்யா. அப்போது, உயிரிழந்த ரசிகர்களின் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுததை பார்த்து சூர்யாவும் கண்கலங்கினார். பலியான ரசிகர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் சூர்யா உறுதி அளித்துள்ளார். இந்த வீடியோவை நடிகர் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.