’அண்டாகா கஸம்... அபுகா குஹும்... திறந்திடு சீசேம்..!’

66-ம் ஆண்டில் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்!’
’அண்டாகா கஸம்... அபுகா குஹும்... திறந்திடு சீசேம்..!’

அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கென்று புத்தகங்கள் நிறையவே வந்தன. தத்துவக்கதைகள், மாயாஜாலக் கதைகள், திடுக்கிட வைக்கும் கதைகள், நல்லவன் - கெட்டவன் கதைகள் என்றெல்லாம் அவை வெளியாகும். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், படிக்கின்ற தலைமுறைகளுக்கு படிப்பின் மீதும் எழுத்தின் மீதும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும். அதேசமயத்தில் நற்குணங்களை விதைப்பது போலவும் இருக்கும்.

அப்படி, பேராசை பெருநஷ்டம் என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதையும் எளிமையாகச் சென்னான் அலிபாபா. ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை எந்த தலைமுறையாலும் மறக்கவே முடியாது.

அலிபாபாதான் நாயகன். வேறு யார்... எம்ஜிஆர்தான். எம்ஜிஆருக்கு ஒரு அண்ணன். நிஜ அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியே படத்திலும் அண்ணன். இளம் வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு மனம் மாறுகிறார். இருக்கிற சொத்துக்களையெல்லாம் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு, தம்பியையும் தங்கையையும் கஷ்டத்தில் தள்ளிவிடுகிறார். ஆனாலும் எம்ஜிஆர், விறகு வெட்டிப் பிழைத்து வருகிறார். அதேசமயம், தன்னால் முடிந்த உதவிகளை ஊருக்குச் செய்து வருகிறார்.

எம்ஜிஆர் என்றாலே அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்பவர்தானே. அப்படித்தான் நாட்டியமாடிப் பிழைப்பு நடத்துவதற்கு அந்த ஊருக்கு பானுமதியும் அவருக்குத் துணையாக சாரங்கபாணியும் வந்திருப்பார்கள். அண்ணனின் ஆட்கள், அவளைப் பிடித்து எம்ஜிஆரின் அண்ணனுக்கு விருந்தாக்க முயல்வார்கள். அப்போது எம்ஜிஆர் வருவார். சண்டையிட்டுக் காப்பாற்றுவார். மேலும் அவர்களுக்கு தங்கள் வீட்டிலேயே அடைக்கலமும் தருவார்.

எம்ஜிஆருக்கும் பானுமதிக்கும் பார்த்ததுமே காதல் பூக்கும். அதேபோல் உடன் வந்திருக்கும் சாரங்கபாணிக்கும், எம்ஜிஆர் வீட்டில் வேலை செய்யும் எம்.என்.ராஜத்துக்கும் காதல் மலரும். இந்தச் சமயத்தில் பணத்தாசை கொண்ட அண்ணன், ‘இன்னும் பணம்... இன்னும் பணம்...’ என்று பணத்தின் மீதான மோகத்திலேயே இருப்பார். அவரின் மனைவியோ அதிகார மோகத்தில் இருப்பாள்.

அப்போது ஒருநாள்... கழுதைகளை ஓட்டிக் கொண்டு, எம்ஜிஆரும் சாரங்கபாணியும் காட்டுக்குச் செல்வார்கள். கழுதை ஓடிவிடும். அதைப்பிடிப்பதற்காகச் செல்லும் போது அங்கே ஒரு பாறைக்குகை இருக்கும். ஏதோ சத்தம் கேட்கும்.

‘அண்டாகா கஸம்... அபுகா குஹும்... திறந்திடு சீசேம்’ என்று சொல்ல குகையின் கதவு திறக்கும். 40 திருடர்களும் குதிரைகளில் வெளியே வருவார்கள். பிறகு, ‘அண்டாகா கஸம்... அபுகா குஹும்... மூடிடு சீசேம்’ என்று சொல்ல, கதவு மூடிக்கொள்ளும்.

இதைப் பார்க்கும் எம்ஜிஆர், சாரங்கபாணியை அழைத்துக் கொண்டு அதே வார்த்தைகளை குகைக்கு முன்னே நின்று சொல்ல, கதவு திறக்கும். உள்ளே வந்து சொல்ல கதவு மூடிக்கொள்ளும். உள்ளே சென்றவர், திருடர்கள் திருடிக் குவித்திருக்கும் நகைகளையும் ஆபரணங்களையும் காசுகளையும் அள்ளிக்கொண்டு சாக்கு மூட்டையில் கட்டி கழுதையில் வைத்து வெளியே வருவார். மிகப்பெரிய செல்வந்தராவார். இதை எவரிடமும் சொல்லமாட்டார்.

தம்பி திடீரென செல்வந்தரானதும் அவர் ஏழைகளுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பதும் கண்டு கடுப்பாவார் சக்ரபாணி. அவரும் அவரின் மனைவியும் அலிபாபாவை விருந்துக்கு அழைப்பார்கள். பாசக்கார அண்ணன் போல் பேசி, ரகசியத்தைக் கேட்டறிவார் சக்ரபாணி. பிறகு அலிபாபாவைக் கைது செய்வார். அப்போது பானுமதியின் புத்திசாலித்தனத்தால் அலிபாபா தப்புவார்.

இதையடுத்து, எம்ஜி.சக்ரபாணி, அந்தக் குகைக்குச் செல்வார். அந்த வார்த்தையைச் சொல்வார். கதவு திறக்கும். நுழைந்தவுடன் மீண்டும் சொல்வார். கதவு மூடிக்கொள்ளும். அங்கே அடிமைகள் போல் கட்டப்பட்ட நிலையில் இருப்பவர்கள், சக்கரம் ஒன்றை தங்கள் வலுவையெல்லாம் திரட்டிச் சுற்றினால், குகையின் கதவு திறக்கவும் மூடவும் செய்திருப்பார் கொள்ளைக் கூட்டத் தலைவன் பி.எஸ்.வீரப்பா.

உள்ளே நுழைந்து, நகைகளையும் பணத்தையும் பார்த்த சக்ரபாணி, ஏற்கெனவே பணத்தாசையில் உழன்றிருப்பதால் இன்னும் பித்துப் பிடித்தது போலாகிவிடுவார். கண்ணில் பட்டதையெல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, கழுத்தில் போட்டுக்கொண்டு ஆனந்தத்துடன் வருவார். ஆனால், குகைக்கதவு திறக்கச் செய்யவும் மூடவைப்பதுமான வார்த்தையை மறந்துவிட்டிருப்பார்.

திருடர்கள் குகைக்கு வருவார்கள். மாட்டிக்கொள்வார். அவரை தலை வேறு உடல் வேறாக்கி கொன்று போடுவார்கள். குகையிலேயே வைத்துவிட்டு, மீண்டும் கொள்ளையடிக்கச் செல்வார்கள். அண்ணன், இங்குதான் வந்திருக்கவேண்டும் என அறிந்த எம்ஜிஆர், உள்ளே சென்று பார்த்தால் அண்ணன் இறந்துகிடப்பார். அவரையும் அவரின் தலையையும் அள்ளிக்கொண்டு, வீட்டுக்கு வருவார்.

அந்த ஊரில் செருப்புத் தைப்பவராக தங்கவேலு இருப்பார். பானுமதி அவரிடம் சென்று, ஆயிரம் பொன் தருகிறேன் என்று சொல்லி, கண்ணைக் கட்டி அழைத்துச் செல்வார். அவர் தலையையும் உடலையும் தைத்து இணைத்துத் தருவார். கொள்ளையர்கள் வந்து பார்த்தால்,சடலம் இருக்காது.

‘யாரோ வந்திருக்கிறார்கள்’ என உணர்ந்து ஊருக்குள் வந்து தேடுவார்கள். அப்போது தங்கவேலு பி.எஸ்.வீரப்பாவிடம் உளறிக்கொட்டிவிடுவார். முன்னதாக, தங்கவேலுவை கண்களைக் கட்டி அழைத்துச் செல்லும் போது, வீட்டுக்கதவில் பெருக்கல் குறி போட்டு வந்திருப்பார். அந்த அடையாளத்தை வீரப்பாவிடம் சொல்லிக் கதவைக் காட்டுவார். இதை ஒட்டுக்கேட்ட பானுமதி, எல்லா வீட்டுக்கதவுகளிலும் பெருக்கல் குறி போட்டுவிடுவார்.

பிறகு ஒருவழியாக, அலிபாபாதான் இதற்கெல்லாம் காரணம் என புரிந்துகொண்ட பி.எஸ்.வீரப்பா, எண்ணெய் வியாபாரியாக வருவார். எம்ஜிஆர் வீட்டில் தங்குவதற்கு உதவி கேட்பார். கூடவே, 39 சீசாக்களையும் அதில் எண்ணெய் இருக்கிறது என்பதாகவும் சொல்லுவார். அந்த 39 சீசாவிலும் 39 திருடர்கள் இருப்பார்கள். வந்திருப்பது கொள்ளைக்கூட்டத் தலைவன் என்பதை பானுமதி தெரிந்துகொள்வார். தனது சொத்துகளையும் பெற்றோரையும் இழக்க இவனே காரணம் என தெரிந்திருப்பார். பானுமதி ஒரு சூழ்ச்சி செய்வார். அதன்படி, சாரங்கபாணியும் எம்.என்.ராஜமும் வீட்டுக்குக் கீழே இருக்கும் ஆற்றில், ஒவ்வொரு சீசாவாக உருட்டிப் போடுவார்கள். கடைசியில் எம்ஜிஆரும் பானுமதியும் சண்டையிட்டு, பி.எஸ்.வீரப்பாவை வீழ்த்துவார்கள் என்பதாக படம் நிறைவுறும்!

இரண்டேமுக்கால் மணிநேரம் ஓடுகிற படம். ஆனால், ஒருநிமிடம் கூட அலுக்காது; சலிக்காது. ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும், கதை - திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் படத்துக்கு மிகப்பெரிய பலம். இந்தியில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது.

தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்தார்கள். அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் முதலான பல கம்பெனிகளில், மாதச்சம்பளம் வழங்கும் முறையே இருந்தது. கதை எழுதுவதற்கு, வசனம் எழுதுவதற்கு என குழு வைத்திருப்பார்கள். இந்தப் படத்தின் கதை வசனம் என்று மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகா என்று ஆங்கிலத்தில் டைட்டில் போடப்படும். படத்தின் டைட்டில் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் போடுவார்கள். எஸ்.தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார். டபிள்யூ.ஆர்.சுப்பாராவ் ஒளிப்பதிவு, படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது.

எம்ஜிஆர், பானுமதி, சாரங்கபாணி, எம்.என்.ராஜம், எம்ஜி.சக்ரபாணி, தங்கவேலு, பி.எஸ்.வீரப்பா, ஓ.ஏ.கே.தேவர் என பலரும் நடித்தார்கள். ‘முந்தானை முடிச்சு’ முதலான பல படங்களில் நடித்த கே.கே.செளந்தரும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். வசனங்கள் இன்னார்தான் எழுதினார் என்பது போடப்படவில்லை. ஆனால் படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் கவித்துவமாகவும் ரசனையாகவும் எழுதப்பட்டிருந்தன. எம்ஜிஆரின் குரல் வசீகரமும் அவர் வசன உச்சரிப்பும் அப்படியே கொள்ளைகொள்ளும்!

எம்ஜிஆருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமோ அதே அளவு பானுமதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாரங்கபாணி காமெடியில் வெளுத்து வாங்குவார். படத்தில் கால்மணி நேரத்து ஒருமுறை ஒரு பாடல் இடம்பெற்றுவிடுகிறது. படம் போட்டு கால்மணி நேரம், அரைமணி நேரம், முக்கால்மணி நேரம் என்பதை பாடலைக் கொண்டே சொல்லிவிடலாம். சாரங்கபாணிக்கே இரண்டு பாடல்கள் இருக்கின்றன என்றால், அந்தக் காலத்துச் சினிமாவைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

’அழகான பொண்ணு நான்’ என்றொரு பாடல். ‘மாசில்லா உண்மைக் காதலே’ என்றொரு பாடல். ‘சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாக்கற்கண்டே’ என்றொரு பாடல். ‘உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தய்யர தய்யர தய்யரா’ என்றொரு பாடல். ’உன்னை விட மாட்டேன்’ என்றொரு பாடல். ’சலாம் பாபு சலாம் பாபு’ என்றொரு பாடல். ‘நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கு’ என்றொரு பாடல். ‘என் ஆட்டமெல்லா’ என்றொரு பாடல். ’அன்பினாலே ஆளவந்த...’ என்றொரு பாடல். எல்லாப் பாடல்களும் தேன், சர்க்கரை, பலாச்சுளை, மாங்கனித் தித்திப்பு. அத்தனைப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின. எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதி இருந்தார்.

ஒளிப்பதிவும் அதற்கு ஏற்ற வகையிலான செட்டிங்குகளும் கவர்ந்தன. அதேபோல், காஸ்ட்யூம்கள் அழகூட்டின. தங்கவேலுவின் கையில் உள்ள ‘சோனா’ ஓவியம் ஒரு கதாபாத்திரமாகவே நம் மனதில் நிற்கும். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கியிருந்தார்.

கூடுதல் தகவல்... 1941ம் ஆண்டு இதே தலைப்பில் படம் தமிழில் வந்தது. அலிபாபாவாக இப்போது எம்ஜிஆர் நடித்த வேடத்தில் நடித்தது யார் தெரியுமா? கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். மார்ஜியானா எனும் கதாபாத்திரத்தில் கலைவாணருக்கு ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்தார். இதுவும் வெற்றியைப் பெற்றது.

இன்னொரு முக்கியமான விஷயம்... தமிழ்த் திரையுலகில் முதல் வண்ணப்படம் எனும் பெருமையைக் கொண்டது ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. கேவா கலர் என்று சொல்லப்படும் டெக்னாலஜிக் கலரில் அமைந்த படம் இது. இதையடுத்துத்துதான் ஈஸ்ட்மென் கலர் ஜாலங்களெல்லாம் வந்தன. ஆக, தமிழ் சினிமாவின் முதல் கலர்ப்படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆரின் ஆரம்ப வசூல் சக்கரவர்த்தியாகவும் ‘அலிபாபா’ திகழ்ந்தான்.

1956-ம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரைக்கு வந்தார்கள், ‘அலிபாபாவும் 40 திருடர்களும்!’ படம் வெளியாகி, 66 ஆண்டுகளாகின்றன. அதாவது முதல் வண்ணப்படம் தமிழில் வெளியாகி 66 வருடங்களாகின்றன. இன்றைக்கும் ‘அண்டாகா கஸம்... அபுகா குஹும்... திறந்திடு சீசேம்’ என்று மீம்ஸ்களில் கூட வந்துகொண்டுதான் இருக்கிறது; டிரெண்டிங் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது!

‘அண்டாகா கஸம்... அபுகா குஹும்... திறந்திடு சீசேம்!’

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in