கமல் தந்த கட்டிப்பிடி வைத்தியம்!

சூப்பர் மாம் அர்ச்சனா சுறு சுறு பேட்டி
அர்ச்சனா
அர்ச்சனா

தூர்தர்ஷனைத் தாண்டி, கேபிள் டிவி என்ற சொல்லாடல் வரத் தொடங்கிய காலக்கட்டம் அது. ’பெப்ஸி உங்கள் சாய்ஸ்’, ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’, ‘டாப் 10 மூவிஸ்’ என ரசிகர்களிடையே அப்போது வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் பலவும் இப்போது நாஸ்டாலாஜியா. அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் அர்ச்சனா முக்கியமானவர். ‘காமெடி டைம்’மில் சிட்டிபாபுவும் இவரும் செய்யும் காமெடி கவுன்ட்டர் சேட்டைகள், நிகழ்ச்சியில் இவர்கள் ’வணக்கம்’ சொல்லும் ஸ்டைல் என எல்லாமே 90’ஸ் கிட்ஸ்ஸின் ஃபேவரைட். 1999-ல் தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது 23 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார் அர்ச்சனா.

இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசுவதற்காக ஒரு மதிய வேளையில் அர்ச்சனாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ’சூப்பர் மாம்’, நாஸ்டாலாஜியா நினைவுகள் என நீண்டது எங்களின் பேச்சு...

சின்னத்திரையில் உங்களுக்கு கம்பேக்காக அமைந்த நிகழ்ச்சி ‘சூப்பர் மாம்’. மூன்றாவது சீசனில் நீங்களும் சாராவும் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள். என்ன எதிர்பார்க்கலாம்?

மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறேன். இது என்னுடைய மூன்றாவது இன்னிங்க்ஸ். ’சூப்பர் மாம்’ தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த ரோல் . புரொஃபஷனலாக மக்களுக்கு அது பிடித்த ரோல். இந்த சீசனையும் நானும் சாராவும் தொகுத்து வழங்குகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சி.

முந்தைய சீசன்களில் சீரியல், சினிமா ஆர்டிஸ்ட் இவர்களை தான் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், இந்த சீசனை பொறுத்தவரை பட்டிமன்றப் பேச்சாளர், யூடியூபர், பின்னணிப் பாடகி, டிக்டாக்கர் என விதவிதமான களத்திலிருந்து போட்டியாளர்கள் வர இருக்கிறார்கள். கூடுதல் ஸ்பெஷலாக குஷ்பு அவர்களும் நடுவராக நிகழ்ச்சியில் இருக்கிறார். அவரும் நிஜத்தில் ஒரு சூப்பர் மாம். இதெல்லாம் சேர்த்து இந்த சீசன் இன்னும் அழகாக இருக்கும் என நம்புகிறேன்.

மீடியா துறைக்குள் நீங்கள் வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. திரும்பிப் பார்க்கும் போது இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?

மீடியாவுக்குள் வந்து 23 வருடங்கள் ஆகிறது. காலர்ஸ் நிகழ்ச்சி, இளைஞர்களோடு, சூப்பர் ஸ்டாருடன் என நிறைய வித்தியாசமான நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். 23 வருடங்கள் கடந்த பிறகும்கூட நிலையான ஒரு இடத்தில் இருக்கிறேன் என்றால் இந்தப் பயணம் நிச்சயம் மதிப்பு மிக்கதுதான். ஏனென்றால்ம், 1999-ல் நான் உள்ளே வந்தபோது, ஆங்கர்ஸ் என்ற ஒரு பதமே பெரிதாக இல்லாமல் இருந்தது. அதன் பிறகு நாங்கள் தொகுப்பாளர் வேலையை நிறைய மாற்றி அமைத்தோம். குறிப்பாக, டிடி போன்றவர்கள் தொகுப்பாளர்களுக்கு ஸ்டைலிங் ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து அதையெல்லாம் மாற்றி அமைத்தார்கள். இதையே தான் பிரியங்கா, மாகாபா என ஒவ்வொருவரும் செய்து தொகுப்பாளர்கள் என்ற பணியை வித்தியாசமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ என உங்களது ஆரம்ப கால ஹிட் நிகழ்ச்சிகள் பற்றி நாஸ்டாலஜியாவான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

சமீபத்தில் சிட்டிபாபு சாருடைய மகளுக்கு திருமணம் நடந்தது. அதற்காக அவரது மனைவி எங்களை அழைத்திருந்தார். அப்போது எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி வந்தது. நான் ‘இளமை புதுமை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது ‘பெப்ஸி’ உமா அக்காவுக்கு தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சி. எனக்கும் அது போலச் செய்யவேண்டும் என்று ஆசை இருந்தது. அடுத்த மூன்று மாதங்களில் எனக்கு ‘காமெடி டைம்’ கிடைத்தது. அதேபோல தான் அடுத்து ஆசைப்பட்ட பாட்டு தொடர்பான ரியாலிட்டி நிகழ்ச்சியும் வந்தது. நீங்கள் ஒரு விஷயம் ஆசைப்பட்டு அதற்காக உழைத்தால் நிச்சயம் அது உங்களுக்கு வந்து சேரும்.

எனது வாழ்க்கையில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், அவரை நேரில் பார்த்து, பேட்டி எடுப்பேன் என நினைத்ததுகூட இல்லை.

இப்போதிருக்கும் சோஷியல் மீடியா யுகத்தில் எதிர்மறை விமர்சனங்களை எப்படி கடந்து வருகிறீர்கள்?

நெகட்டிவிட்டி என்பது எல்லா காலக்கட்டத்திலும் இருந்திருக்கிறது. சோஷியல் மீடியா காலத்தில் இது உங்களை நேரடியாகவே பாதிக்கிறது. இந்த எதிர்மறை விமர்சனங்களை இரண்டு வழிகளில் கையாளலாம். ஒன்று, முகம் தெரியாத அவனால் உங்களைப் பாதிக்கவிடலாம் அல்லது ‘Get Well Soon’ என அவனை வாழ்த்திவிட்டுச் செல்லலாம்.

இதை எல்லாம் ஆரம்ப காலத்தில் எதிர் கொண்டபோது உடைந்து தான் போனேன். அப்படி ஒரு நாள் இருந்தபோது என் மகள் சாரா என்னிடம் வந்து, “இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாது, இவர்கள் உனக்குச் சோறும் போடமாட்டார்கள். இவர்கள் சொல்வதற்கு எல்லாம் நீ பதில் சொல்லிக்கொண்டிருப்பதால் அவர்கள் சொல்வது உண்மை போல ஆக்கிக்கொண்டிருக்கிறாய். அதனால் எனர்ஜியை வீணடிக்காமல், நீ எப்படி இருப்பாயோ அப்படியே இரு” என்றாள். அதைத்தான் நானும் பின்பற்றி வருகிறேன்.

ரஜினியைப் பேட்டி எடுத்தது தவிர, வேறு எந்தப் பேட்டி உங்கள் மனதுக்கு நெருக்கமானது?

’காமெடி டைம்’ நிகழ்ச்சியில் நாங்கள் மூன்று முறை சொல்லும் வணக்கம் அப்போது பயங்கர ஃபேமஸ். ‘சச்சின்’ படத்தில் வடிவேலு, ஜெனிலியா கேன்டினில் பேசிக்கொண்டிருக்கும் போது விஜய் அங்கு வந்து ‘காமெடி டைம்’ ஸ்டைலில் ‘வணக்கம் வணக்கம் வணக்கம்’ என மூன்று முறை சொல்வார். பின்பு படப்பிடிப்பு நடந்த அதே பச்சையப்பா கல்லூரியில் விஜய் அவர்களைப் பேட்டி எடுத்தேன். அது என்னால் மறக்க முடியாதது.

எந்தப் பிரபலத்தைப் பேட்டி எடுக்கும்போது பதற்றமாகி இருக்கிறீர்கள்?

‘ஜீ தமிழ்’ சேனலில் இருந்த போது ‘விஸ்வரூபம்2’ படத்திற்காக நடிகர் கமல்ஹாசனை பேட்டி எடுத்தேன். பேட்டி என்றால் அதில் ஒரு சின்ன செக்மென்ட்டுக்காக நான் போக வேண்டி இருந்தது. ‘திருவிளையாடல்’ படத்தில் நாகேஷ்-சிவாஜி போல ஒரு வார்த்தையில் கேள்வி- பதில் என்ற செக்மென்ட் அது. அவர் உலக நாயகன். நான் கேட்கும் கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதைக் கவனித்து ஒரே டேக்கில் நான் அதை முடிக்க வேண்டும். அப்போது எல்லாம் டாக் பேக் இல்லை. அந்த சமயத்தில் நான் பதற்றமானேன். ஆனாலும் அந்தப் பகுதி சிறப்பாகவே வந்தது.

அந்தப் பதற்றமெல்லாம் போய் சகஜமாக பழக்கமான பிறகு தான் ஜீ தமிழ் விருதுகள் விழாவில் கட்டிப்பிடி வைத்தியம் யாருக்கு என கேட்டபோது என்னைக் கூப்பிட்டு அன்பைத் தந்தார் கமல். இதை பார்த்து நடிகர் விஜய்யும் ”எனக்கும் கட்டிப்பிடி வைத்தியம் வேண்டும்” என்று கமலிடம் உரிமையுடன் கேட்டு வாங்கினார்.

நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தாது ஏன்?

வாய்ப்பு வரவில்லையே! ‘டாக்டர்’ படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பலரும் பாராட்டினார்கள். அதைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவியப் போகிறது, நாம் வேற லெவலில் இருக்கப் போகிறோம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது வரை ஒரு கால்கூட வரவில்லை. எனக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. தூரத்தில் நின்று ‘தலைவா’ என்று அவுட் ஆஃப் ஃபோகஸில் கத்தினால்கூட பரவாயில்லை. சீக்கிரம் அது நடக்கும் என நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in