பாய்ஃபிரெண்டுக்கு இப்போது இடமில்லை!

அம்ரிதா ஐயர் அதிரடி பேட்டி
அம்ரிதா ஐயர்
அம்ரிதா ஐயர்

கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படத்தை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் நாயகன் கவினை விட, ரசிகர்களிடம் அதிக அப்ளாஸ்களை அள்ளியவர் நாயகி அம்ரிதா ஐயர். அதற்குமுன், ‘பிகில்' படத்தில் விஜயிடம் பயிற்சிபெறும் மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ‘தென்ற’லாக வந்து விஜயைத் திட்டுகிற கதாபாத்திரத்தில் கலங்கடித்தார். தற்போது தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம் என தன் எல்லைகளை விரித்திருக்கும் அம்ரிதாவுடன் காமதேனுவுக்காக பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து...

எப்படியிருக்கீங்க ‘தென்றல்’?

என்னை இன்னும் ‘தென்ற’லாக நியாபகம் வைத்திருப்பதற்கு நன்றி. ‘பிகில்’ வெளியாகி 3 வருடங்கள் ஆகப்போகிறது. நானும் பத்து படங்களைத் தாண்டிவிட்டேன். ஆனால், இன்னமும் ‘தென்றல்’ கேரக்டருக்கு மவுசு குறையவில்லை. எனது சோஷில் மீடியா பக்கங்களில் இணையும் அனைவரும் என்னைத் ‘தென்றல்’ என்றே அழைக்கிறார்கள். இந்தப் பெருமை அனைத்துக்கும் விஜய் சார்தான் காரணம். ‘ஒரு படம் ஓஹோ புகழ்’ என்பார்களே அது எனக்கு பொருந்தும்.

‘பிகில்’, ‘தெறி’ என விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்த அனுபவத்தில் சொல்லுங்கள். அவர் எப்படிப் பழகுவார்?

அவரைப்போல் ஹம்பிளான ஒரு ஸ்டாரைப் பார்க்க முடியாது. படப்பிடிப்பில் என்னைப் பார்க்கும்போது, “எப்பிடிமா இருக்கீங்க...”ன்னு கேட்பார். அப்புறம், “டீம் ஒழுங்கா பார்த்துகிறாங்களா..?”ன்னு கேட்டு கிராஸ் செக் பண்ணிக்குவார். எல்லோரிடமும் இந்த பரிவைக் காட்டுவார். ‘பிகில்’ படத்துல அவரை எதிர்த்துப் பேசும் காட்சியில் அவரது கண்களைப் பார்த்து என்னால் பேசி நடிக்க முடியவில்லை. இதை அவரிடம் சொன்னதும் அவர், “நீங்கள் திட்டும்போது நான் கண்களை மூடிக்கொள்கிறேன். தைரியமாக நடியுங்கள்” என்றார். அப்படித்தான் அந்தக் காட்சியில் நடித்தேன். மீண்டும் விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தால் அது எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன். அப்படியான வாய்ப்பு அமையாவிட்டாலும் ‘பிகில்’ பட நினைவுகளே எனக்குப் போதும்!

‘பிகில்’ படத்தில் நீங்கள் கால்பந்து விளையாடும் ஸ்டைல் ஒரு உண்மையான கால்பந்து வீராங்கனையைப் போல் இருந்ததே! ஆடுகளத்தை விட்டுவிட்டு, சினிமாவில் எப்படி ஆர்வம் வந்தது?

உண்மையில் நான் ஒரு பேஸ்கட் பால் வீராங்கனை. சென்னையில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவள், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசுவேன். பள்ளி நாட்களில் தொடங்கி தடகளம், பேஸ்கட் பால் போட்டிகளில் நிறைய பங்கெடுத்துள்ளேன். இதை அறிந்தே இயக்குநர் அட்லி சார் என்னை ‘பிகில்’ படத்துக்குத் தேர்வு செய்தார். கல்லூரியின் கல்சுரல் மீட்களில் நடனம், நாடகம் என ஆர்வம் காட்டினேன்.

கல்லூரி முடித்ததும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றினேன். அங்கே பணியாற்றிய என் தோழி அனிதா, என் ஆர்வத்தைப் பார்த்து மாடலிங் துறைக்கு அழைத்து வந்தாள். பின்னர் அவளே என்னை சென்னைக்கு அழைத்து வந்து கோலிவுட்டில் அறிமுகம் ஏற்படுத்தித் தந்தாள். தொடக்கத்தில் குறும் படங்களில் நடித்தேன். அவற்றின் மூலம் முழுநீளப் படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் வந்துபோனேன். ’படை வீரன்’ படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழைவிட தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிச் சாத்தியமானது?

‘பிகில்’ படத்துக்குப் பின் வரிசையாக வாய்ப்புகள் வந்தன. ‘ரெட்’, ‘30 ரோஜாலு பிரேமிசந்தம் எலா’, ’அர்ஜுனா பால்குணா’, ‘ஹனுமேன்’ என நான்கு தெலுங்குப் படங்களை முடித்துவிட்டேன். இதில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ‘30 ரோஜாலு பிரேமிசந்தம் எலா’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நீலி... நீலி... ஆஹாசம்’ என்ற பாடல் ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் ரொம்பவே பாப்புலர்!

‘ஹனுமேன்’ தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் ஒரு பான் இந்திய சூப்பர்மேன் படம். இதில் மீனாட்சி என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்துக்காக 100 நாள் கால்ஷீட் கொடுத்தேன். இந்தப் படம் வெளிவந்தபிறகு டோலிவுட்டில் எனது இடம் இன்னும் பெரிதாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது தெலுங்கில் இரண்டு படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஒன்றில் ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ படத்தின் நாயகன் கார்த்திக் ரத்னத்துடன் இணைந்து நடிக்கிறேன்.

சுந்தர்.சி இயக்கத்தில் தமிழிலும் நடிக்கிறீர்கள் போலயே?

ஆமாம்! படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா ஆகியோருடன் நானும் ஒருத்தியாக நடித்து வருகிறேன்.

அம்ரிதாவுக்கு ஒரு பாய்ஃபிரெண்ட் இருப்பதாக செய்திகள் வெளியானதே?

இப்போதுதான் எனக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதைக் கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எவராவது இப்படிக் கிளப்பிவிட்டிருக்கலாம். சினிமாவை மிகவும் நேசித்து இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். முதலில் திறமையான நல்ல நடிகை என்று பெயர் வாங்கவேண்டும். எனக்கு இப்போது கிடைத்திருக்கும் ரசிகர்களின் இந்த வரவேற்பை இன்னும் பத்து வருடங்களுக்காவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதுவரை காதலுக்கோ, பாய்ஃபிரெண்டுக்கோ எனது வாழ்க்கையில் இடமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in