
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், படப்பிடிப்பு ஒன்றில் படுகாயமடைந்து இருக்கிறார்.
80 வயதாகும் அமிதாப் பச்சன், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். தற்போதும் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் உடன் ’புராஜக்ட் கே’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் ஈடுபட்டிருந்தார்.
ஆக்ஷன் காட்சி ஒன்றுக்கான படப்பிடிப்பின்போது எதிர்பாரா வகையில் அவருக்கு படுகாயம் நேரிட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் விலா எலும்பு முறிவு மற்றும் அதனையொட்டிய தசை நார் பாதிப்பு அடையாளம் காணப்பட்டது. சிகிச்சை முடிந்து தற்போது தனது மும்பை இல்லத்தில் ஓய்வு பெற்று வரும் அமிதாப் பச்சன், நடந்த விபத்து மற்றும் சிகிச்சை விபரங்களை ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.
மேலும், தான் நலமாக இருப்பதாகவும், எவரையும் சந்திக்கும் நிலையில் இல்லாததால் ரசிகர்கள் வருகையை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன் காயமடைந்ததில், ’புராஜக்ட் கே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாள் குறிப்பிடாது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.