அஜித் ரசிகர்களை சீண்டும் ’ஷாலினி அஜித்’: ட்விட்டர் களேபரம்!

ஷாலினி
ஷாலினி

ஷாலினி அஜித்குமார் பெயரில் போலியான ட்விட்டர் கணக்குகளை தொடங்குவோர் மீது, அஜித் ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

பல தடைகளுக்குப் பின்னர் ஒருவழியாக, அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கொண்டாட அவகாசமின்றி, அஜித் தொடர்பான இன்னொரு விவகாரத்தில் அவரது ரசிகர்கள் ஆவேசம் காட்டி வருகின்றனர்.

ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில், நேற்று(பிப்.1) ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்று தொடங்கப்பட்டிருந்தது. அஜித்குமார், ஷாலினி தம்பதி இணைந்து நிற்கும் அண்மைப் புகைப்படம் ஒன்றும் அந்த ட்விட்டர் கணக்கில் இடம்பெற்றிருந்ததால், அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர். ட்விட்டரில் ஷாலினி என்ற பரபரப்பு கிளம்ப, ஒருசில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் அந்த ட்விட்டர் ஐடியை பின்தொடர ஆரம்பித்தனர்.

பிரபலங்களின் அடையாளங்களின் முக்கியமானது அவர்களுக்கான பிரத்யேக சமூக ஊடகக் கணக்கு. பெரும்பாலான பிரபலங்கள் இதற்கென தனியாக ஆட்களை வைத்தே, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர். தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவும், புதிய திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளை அவர்களுக்கு தெரிவிக்கவும் இந்த ட்விட்டர் கணக்கை பயன்படுத்துகின்றனர். இவற்றோடு, ட்விட்டரில் இருக்கும் இதர பிரபலங்களை தொடர்புகொள்ளவும், முக்கியமான தருணங்களில் இணைந்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் சமூக ஊடக தளத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அமிதாப் பச்சன் போன்ற பாலிவுட் தொடங்கி கோலிவுட்டின் ரஜினிகாந்த் வரை ட்விட்டரில் தீவிரமாக களமாடும் சூப்பர்ஸ்டார்கள் அதிகம். உச்ச நட்சத்திரங்களுக்கு அப்பால், புதிதாக திரையுலகில் நுழைவோரும், ட்விட்டர் வாயிலாகவே தங்கள் இருப்பையும், திறமையையும் உரியோருக்கு பறைசாற்ற முயல்கின்றனர். மேலும் ரசிகர்களுடன் தொடர்புகொண்டு, நற்பெயரை உருவாக்கவும் முயல்கின்றனர்.

இவர்களுக்கு மத்தியில் தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் சமூக ஊடகப் பயன்பாட்டில் ஆர்வம் காட்டாதோரும் உண்டு. அவர்களில் நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகர் விஜய்யின் ட்விட்டர் கணக்கை அவரது அலுவலத்தினர் நிர்வகிப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அப்படியான கணக்கிலும், வருடத்துக்கு ஓரிரு பதிவுகளே இடம்பெறும். ஆனால் விஜய் தரப்பில் வெளியாகும் அப்படியான ஓரிரு பதிவும் தேசிய அளவில் சாதனை பெறும்.

இன்னொருவரான நடிகர் அஜித் குமார், எந்த சமூக ஊடகத்திலும் வெளிப்படையாக இல்லை. ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டியதைக் கூட, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வாயிலாகவே அறிவிப்பாகும். இந்தச் சூழலின் மத்தியில் ஷாலினி அஜித்குமார் பெயரில் ட்விட்டர் கணக்கு தென்படவே, அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி பலதரப்பினரும் ஆர்வத்தோடு அந்த ஐடியை பின்தொடர ஆரம்பித்தனர்.

சிலருக்கு மட்டும் சந்தேகம் இருந்தபோதும், ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த அடுத்த நாளே வலிமை ரிலீஸ் அறிவிப்பு வெளியானதில், அமைதியாகிவிட்டனர். வலிமை புரொமோஷனுக்காக ஷாலினி அஜித் ட்விட்டரில் இணைந்திருக்கிறார் என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர். அதற்கேற்ப யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஒருசில திரையுலகை சேர்ந்த நபர்களும், ஷாலினி பெயரிலான ஐடியை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து விளம்பரம் தேடிக்கொண்டனர். இதனால், ஷாலினி பெயரிலான ட்விட்டர் கணக்கு மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது.

இந்தச் சூழலில் இன்று காலை அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய டிவிட்டர் கணக்கு வாயிலாக, அஜித் ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ’திருமதி ஷாலினி அஜித்குமார் பெயரிலான ட்விட்டர் ஐடி போலியானதாகும். அவர் ட்விட்டரில் இல்லை என்பதை தெளிவுடுத்துகிறோம். போலி கணக்கை புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று விளக்கி இருந்தார்.

அதுவரை, ஷாலினி பெயரிலான பக்கத்தில் நம்பி, பம்மியவாறு பதிவுகள் இட்டுவந்தவர்கள், அதன் பிறகு வெகுண்டெழுந்து திட்டித் தீர்த்துவருகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் அந்தக் கணக்கிலிருந்து வெளியேறவும் இல்லை. அஜித்துக்கு எதிராக அந்த கணக்கில் ஏதேனும் பதிவுகள் இடப்படுகிறதா, ஷாலினி அல்லது அஜித்துக்கு எதிராக வன்மமான பதிவுகள் இடப்படுகிறதா எனவும் கவனித்து வருகின்றனர். ஆனால், அந்த ஐடி அஜித்தின் ரசிகர்களில் ஆர்வக்கோளாறான ரசிகர் எவரோ ஆரம்பித்த கணக்காகவே தென்படுகிறது. அதற்கேற்ப, வலிமை ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையம் முழுக்க பரவி ஓய்ந்தபிறகு ’ஷாலினி அஜித்குமார்’ வலிமை ரிலீஸ் குறித்த போஸ்டரை பகிர்ந்திருக்கிறார்.

சுரேஷ் சந்திரா வெளியிட்ட தகவலை அடுத்து, அஜித் ரசிகர்களை சீண்டிவரும் ‘ஷாலினி அஜித் குமார்’ பெயரிலான ட்விட்டர் கணக்கு குறித்து ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில், ஷாலினி பெயரில் மேலும் சில கணக்குகள் ட்விட்டரில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் சில வெளிப்படையாகவே இது ரசிகரின் பக்கம் என்பதையும் சிறிய எழுத்தில் கொடுத்துள்ளனர். அஜித் ரசிகர்கள் ஆவேசத்தை அடுத்து, ஷாலினி அஜித்குமாரை வரவேற்கும் தன்னுடைய பதிவை யாஷிகா ஆனந்த் உடனடியாக நீக்கி உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in