ஒத்திப்போகாது, ஓடிடிக்கு ஒதுங்காது வலிமை காட்டும் ‘வலிமை’

ஒத்திப்போகாது, ஓடிடிக்கு ஒதுங்காது வலிமை காட்டும் ‘வலிமை’
வலிமை

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதில் பல்வேறு மாநிலங்களும் அடுத்தடுத்து படிப்படியாக பொதுமுடக்கத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. திரையரங்குகளும் இதில் விதிவிலக்கல்ல என்னும்போது, பண்டிகை கால வெளியீடாக திட்டமிடப்பட்ட திரைப்படங்கள் பலவும் பின்வாங்கி வருகின்றன. அஜித் குமார் நடித்த வலிமை மட்டும் விதிவிலக்காக நிற்கிறது.

ராதே ஷ்யாம்
ராதே ஷ்யாம்

ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததுமே, திரையரங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த பாலிவுட் படங்கள் பின்வாங்கின. வேறுபல திரைப்படங்கள், நேரடி ஓடிடி வெளியீடு என்ற தீர்மானத்தோடு தயாராகின. ஷாகித் கபூர், மிருணாள் தாகூர் நடித்த ஜெர்சி திரைப்படம், டிச.30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்வாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜன.21 அன்று தியேட்டர் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த அக்சஷய் குமாரின் பிரித்விராஜ் திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பீரியட் திரைப்படமாக பெரும் பொருட்செலவில் உருவான பிரித்விராஜ், திரையரங்கில் வெளியானால் மட்டுமே லாபமீட்ட முடியும் என்று கணித்திருக்கிறார்கள்.

பிருத்விராஜ்
பிருத்விராஜ்
ஆர்ஆர்ஆர்
ஆர்ஆர்ஆர்

பாலிவுட் பாதிப்பில் டோலிவுட் திரைப்படங்களும் பின்வாங்கியுள்ளன. பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் தள்ளிப்போயிருகிறது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட் என பாலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்திருந்த இந்த பான் இந்தியா திரைப்படம், ஜன.7 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒத்திப்போகும் திரைப்படங்களில் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் சேர்ந்திருக்கிறது. தெலுங்கில் தயாரான இன்னொரு பிரமாண்ட திரைப்படமான ராதே ஷ்யாம், இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது. பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த இன்னொரு பன்மொழி திரைப்படமான ராதே ஷ்யாம் ஜன.14 அன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாள் குறிப்பிடாது ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.

ஜெர்சி
ஜெர்சி

இந்த பட்டியலில் இன்னும் பல திரைப்படங்கள் சேர்ந்து வரும் நிலையில் தமிழில் தயாரான வலிமை மட்டும் வலிமை காட்டி வருகிறது. ஒத்திப்போடுவதும், ஓடிடி பக்கம் ஒதுங்குவதுமாக மாறி வரும் திரைப்பட வெளியீடுகளின் மத்தியில் அழுத்தமாக, திரையரங்கு வெளியீட்டில் தீர்மானமாக இருக்கிறது வலிமை. ரசிகர்களின் பேராதரவு மட்டுமன்றி திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அகன்ற திரையில் பார்ப்பது மட்டுமே முழுமையான திரையனுபவத்தை தரும் என்பதில் படக்குழு தீர்மானமாக இருக்கிறது. ஆனால் பொங்கலுக்கு இன்னும் நாளிருப்பதால், கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்.

Related Stories

No stories found.