
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநராக வளர்ந்து வரும் லோகேஷ் கனகராஜ், தனது 37வது பிறந்தநாளை இன்று லியோ படக்குழுவினருடன் கொண்டாடுகிறார்.
மாநகரம் என்ற தனது முதல் திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்தபடியாக கார்த்தியை வைத்து அதிரிபுதிரியான கைதி திரைப்படத்தை கொடுத்தார். விஜய் உடனான மாஸ்டர் திரைப்படம், அவருக்கான தனித்துவ மார்க்கெட்டை உருவாக்கியது. அடிப்படையில் கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ்க்கு, விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தது.
கமலுக்கும் விக்ரம் ஏற்றம் தந்ததில், லோகேஷ் கனகராஜ் மீதான ரசிக எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. வேறெந்த சினிமா இயக்குநருக்கும் வாய்த்திராத ’லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ நம்பிக்கையை இளம் வயதிலேயே வரித்திருக்கிறார் லோகேஷ். நாயக பிம்பத்தை நுணுக்கமாக செதுக்குவது முதல் காட்சியில் வந்து செல்லும் ஆயுதங்கள் உள்ளிட்ட சிறிய பிராப்பர்டிக்கும் அவர் அளிக்கும் டீடெய்லிங் வரை லோகேஷ் பாணியை இளம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது லியோ படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும், லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளினை முன்னிட்டு, லியோ அப்டேட் இன்று நிச்சயம் என சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் தேவுடு காத்திருக்கின்றனர். விஜய் ரசிகர்களுக்கு நிகராக அடுத்தாண்டு ஏப்ரலுக்கு திட்டமிடப்பட்டிருக்கும், ’இரும்புக் கை மாயாவி’க்காக சூர்யா ரசிகர்களும் லோகேஷ் பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்கள். கோவை மாவட்டத்தின் ஒரு மூலையிலிருந்து கிளம்பி கோலிவுட்டில் நிதானமாக பாய்ச்சல் காட்டும் லோகேஷ் கனகராஜ், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும், சினிமாவுக்கு அப்பாலான இளம் தலைமுறையினருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகி இருக்கிறார்.