
‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, ‘மைனா’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் அமலா பால்.
இதைத் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தார்.
பிறகு, மற்ற நடிகைகள் நடிக்க யோசிக்கத் தயங்கிய ‘ஆடை’ திரைப்படத்தில் துணிச்சலுடன் நடித்தார். தொடர்ந்து, பெண் கதாபாத்திரங்களை மையம் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் அமலாபால். தற்போது தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாகத் தயாராகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’, ‘கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து முதன்முறையாக பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார் அமலாபால். அவரது நடிப்பில் புதிய இந்தி வெப் சீரிஸ் ஒன்று தயாராகி வருகிறது. 1980-களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ரஞ்சிஷ் ஹி சஹி’ என்ற வெப் சீரிஸில், பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.
மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வூட் செலக்ட் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.