தொடங்குகிறது `புஷ்பா 2’ ஷூட்டிங்: புதிய தோற்றத்தில் அல்லு அர்ஜுன்!

தொடங்குகிறது `புஷ்பா 2’ ஷூட்டிங்: புதிய தோற்றத்தில் அல்லு அர்ஜுன்!

புதிய தோற்றத்தில் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். அவர் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

நடிகை சமந்தா, ’ஊ சொல்றியா மாமா’ என்ற குத்துப்பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம், தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் படம் அதிக வசூலைப் பெற்றது. அடுத்த பாகத்துக்கான வேலைகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. முதல் பாகம் வசூலில் மிரட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது புதிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காதில் வளையத்துடன், சுருட்டு பிடித்தபடி காட்சி தரும் அவர், செம ஸ்டைலாக இருக்கிறார். அதில், சுருட்டு புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள், ’இதுதான் புஷ்பா 2 படத்துக்கான லுக்கா?’ என்று கேட்டுள்ளனர். சிலர், இந்தத் தோற்றத்தில் நடிகர் விக்ரம் போலவே இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in