
போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார், தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறி கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு உள்ள கருப்பு பிலிம்களை (டின்ட் கிளாஸ்) நீக்கி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் இந்த சோதனையில் இருந்து தப்புவது இல்லை.
சமீபத்தில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கார், வாகன சோதனையில் சிக்கியது. அவருக்கு ரூ.700 அபராதம் விதித்த போலீஸார், கருப்பு பிலிம்களை அகற்றினர். பின்னர் நடிகர் மனோஜ் மன்சு, இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கார்களும் வாகன சோதனையில் சிக்கின. அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் காரும் இதில் சிக்கியுள்ளது. அவர் ரேஞ்ச் ரோவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்து போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர் காரில் கண்ணாடிகளிலும் விதி மீறி, அளவுக்கு அதிகமான அடர்த்தியுடன் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. அதை அகற்றிய போலீஸார், அவருக்கு ரூ.700 அபராதம் விதித்துள்ளனர்.