ஹிட் அடித்த `புஷ்பா': சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்திய ஹீரோ

ஹிட் அடித்த `புஷ்பா': சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்திய ஹீரோ
புஷ்பா - அல்லு அர்ஜுன்

’புஷ்பா’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அந்தப் படத்தின் ஹீரோ தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. நடிகை சமந்தா ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது.

புஷ்பா - அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா
புஷ்பா - அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்துப் பகுதியிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைப் படக்குழு தொடங்கி இருக்கிறது. முதல் பாகத்தின் இந்தி பதிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இரண்டாம் பாகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்க இருக்கின்றனர்.

இதற்கிடையே, இந்தப் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல் பாகத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன், இப்போது ரூ.100 கோடி சம்பளம் கேட்கிறாராம். இந்தச் சம்பளம் கொடுக்கப்பட்டால், தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ இவர்தான் என்கிறார்கள். ஆனால், சம்பள விவரத்தைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.