ராஜமவுலியை அன்ஃபாலோ செய்தாரா?- ஆலியா பட் விளக்கம்

ராஜமவுலி, ஆலியா பட்
ராஜமவுலி, ஆலியா பட்

ராஜமவுலியை சமூக வலைதளத்தில் அன்ஃபாலோ செய்ததாக வந்த தகவலை நடிகை ஆலியா பட் மறுத்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், ஆர்ஆர்ஆர். இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நடிகை ஆலியா பட்டுக்கு சிறிய ரோல் கொடுத்தார் என்றும் அவர் காட்சிகளை ராஜமவுலி அதிகமாக வெட்டிவிட்டார் என்றும் கோபத்தில் இருக்கும் ஆலியா பட், சமூக வலைதளத்தில் அவரை அன்ஃபாலோ செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின.

அதோடு, தனது அடுத்த படமான ’பிரம்மாஸ்த்ரா’ படத்தின் புரமோஷன்களில் இறங்கி உள்ள அலியா பட் ’ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த போஸ்டர்களையும் நீக்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதிருப்தியில் இருந்ததால்தான் அலியா பட், இப்படி செய்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஆலியா பட்.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் இன்ஸ்டாகிராமை அடிப்படையாக வைத்து நீங்களாகவே எந்த அனுமானத்தையும் செய்ய வேண்டாம். எப்போதும் அதில் என் பழைய வீடியோக்களை மாற்றி அமைப்பது வழக்கம். அப்படித்தான் அதை செய்தேன். ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் அந்த சீதா கேரக்டரிலும் ராஜமவுலி இயக்கத்தில் நடித்ததையும் விரும்பினேன். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோருடன் நடித்ததும் பிடித்திருந்தது.

இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்பினேன். இப்போது ஏன் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்றால், ராஜமவுலியும் அவர் குழுவினரும் வருடக் கணக்கில் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அதனால், இந்தப் படம் பற்றிய எந்த தவறான செய்தியையும் என்னால் அனுமதிக்க முடியாது என்பதால்தான்.

இவ்வாறு ஆலியா பட் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in