அக்‌ஷய் குமாருக்கு கரோனா: கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை!

அக்‌ஷய் குமாருக்கு கரோனா: கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை!

தனக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

75-வது கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில், 12 இந்திய திரைத் துறை பிரபலங்கள் அடங்கிய குழு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்கிறது.

அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் மாமே கான், நடிகர்கள் அக்‌ஷய் குமார், மாதவன், நவாஸுதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், இயக்குநர் சேகர் கபூர் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் அனைவருக்கும் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் கேன்ஸ் செல்லவில்லை. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘கேன்ஸ், இந்தியா பெவிலியனில் பங்கேற்க ஆவலுடன் இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் உங்கள் முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்’ என்று அமைச்சர் அனுராக் தாகூரை டேக் செய்து அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.

அக்‌ஷய் குமாருக்கு 2021 ஏப்ரல் மாதமும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்போது இரண்டாவது முறையாக அவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in