`வடக்கு, தெற்குன்னு பிரிச்சா வெறுப்பா வருது, அந்தக் கேள்வியை நிறுத்துங்க’: ஆவேசப்பட்ட அக்‌ஷய் குமார்

`வடக்கு, தெற்குன்னு பிரிச்சா வெறுப்பா வருது, அந்தக் கேள்வியை நிறுத்துங்க’: ஆவேசப்பட்ட அக்‌ஷய் குமார்

வடக்கு, தெற்கு என்று சினிமாவை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்று நடிகர் அக்‌ஷய்குமார் கூறினார்.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் ’2.0’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ’பிருத்விராஜ்’ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்துள்ளார். ஜூன் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்‌ஷய் குமார் கூறுகையில், ``ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலேயே உருவாகிறது. அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும். பான் இந்தியா என்பதை நம்பவில்லை. தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்று யாராவது சொன்னால், அதை வெறுக்கிறேன்.

இப்படிப் பிரிப்பதை நம்பவில்லை. நாம் அனைவரும் ஒரே துறையில்தான் பணியாற்றுகிறோம் என்றே நம்புகிறேன். இதுபோன்ற கேள்விகளையும் நிறுத்த வேண்டும். வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். மொழியின் அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்துவதை ஆங்கிலேயர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நாம் அனைவரும் ஒன்றென புரிந்துகொள்ளத் தொடங்கும் நாளில், எல்லாம் சிறப்பாக மாறும்.

தெற்கு, வடக்கு என்கிற விவாதம் பெரிதாக மாறிவிட்டது. அது நிறுத்தப்பட வேண்டும். மொழியை பொறுத்தவரை அவரவர் தாய்மொழியில்தான் பேசி வருகிறோம். அது அழகாக இருக்கிறது. இதில் பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பிரித்துப் பார்ப்பது துரதிர்ஷ்டமானது'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in