அஜித், விஜய் பேனர் கிழிப்பு; தியேட்டரில் கண்ணாடி உடைப்பு: களேபரமான துணிவு, வாரிசு ரிலீஸ்

அஜித், விஜய் பேனர் கிழிப்பு; தியேட்டரில் கண்ணாடி உடைப்பு: களேபரமான துணிவு, வாரிசு ரிலீஸ்

அஜித், விஜய் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதோடு, நடிகர்களின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் ரசிகர்களின் மண்டை உடைந்தது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் `துணிவு' படம் நள்ளிரவு ஒரு மணிக்கும், `வாரிசு' திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. இதையடுத்து இருதரப்பு ரசிகர்களும் அதிகளவில் திரண்டனர். இதனால் திடீர் தேனீர் கடை, பிரியாணி கடை போன்றவையும் முளைத்தன. தளபதி என விஜய் ரசிகர்களும், தல, ஏகே என அஜித் ரசிகர்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். ஒருகட்டத்தில், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. திரையரங்கில் அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேபோல், கோவை மாநகர் பூ மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள அர்ச்சனா - தர்சனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்துள்ள `துணிவு' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருந்தது. இதையொட்டி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டிருந்தனர். காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டர் கதவை உடைத்துவிட்டு திரையரங்குக்குள் நுழைந்தனர். இந்த நெரிசலில் முகப்பில் இருந்த கண்ணாடியும் படிக்கட்டு கம்பிகளும் உடைக்கப்பட்டன. காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய தடியடியிலும் கூட்ட நெரிசலிலும் சில ரசிகர்களுக்கு மண்டை உடைந்து ரத்த காயமும் ஏற்பட்டது.

ஒரே நாளில் அஜித், விஜய் படம் வெளியானதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in