’வலிமை’ ஸ்டன்ட் காட்சிகளை பின்பற்ற வேண்டாம்’

அஜித்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அறிவுரை
’வலிமை’ ஸ்டன்ட் காட்சிகளை பின்பற்ற வேண்டாம்’

’வலிமை’ படத்தில் அஜித் செய்த ஸ்டன்ட் காட்சிகளை ரசிகர்கள் பின்பற்ற வேண்டாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேஷ் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’வலிமை’. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பைக் சாகச சண்டைக் காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அஜித் செய்வதை போல, ரசிகர்களும் வீலிங் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு சிகிச்சை அளித்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ் பத்மநாபன், அப்படி செய்வது ஆபத்தானது என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

’வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் நான்கு, ஐந்து முறை அஜித் காயம் அடைந்திருக்கிறார். கடந்த 15 வருடங்களில் பலமுறை அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்திருக்கிறது. அதைத் தாண்டி அவர் இப்போது ரிஸ்க் எடுத்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறார் என்பது ஆச்சரியம். அஜித்துக்கு முதுகில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. கீழ் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவர் பக்கவாதப் பாதிப்பை நெருங்கிவிட்டு அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.

தோள்பட்டையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டியும் அவர் நடிக்கிறார் என்றால், அதற்கு மருத்துவர்களும், கடவுளின் ஆசியும்தான் காரணம். படத்தில் அஜித் செய்வதைப் பார்த்து ரசிகர்கள் செய்யக் கூடாது. அதனால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும். சாலையில் அதை போன்று செய்யும்போது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அப்படித்தான் பைக் சாகசம் செய்ய வேண்டும் என்று விரும்பினால், அதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு அதற்கான இடங்களில் செய்துகொள்ளலாம். சாலைகளில் செய்யக் கூடாது.

அஜித், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும் அக்கறை கொள்பவர். அப்படித்தான் ரசிகர்களையும் பார்க்கிறார். வீலிங் போன்ற செயல்களை படத்துக்காக, அதை பாதுகாப்பாக செய்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் அந்த ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று அஜித் சொல்வார்.

இவ்வாறு மருத்துவர் நரேஷ் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in