வலிமை ட்ரெய்லர் வெளியானது

2 வருட இடைவெளிக்குப் பின்னர் வெளியாக உள்ள அஜித்குமார் நடித்த, வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று(டிச.30) மாலை வெளியானது.

பொங்கலுக்கு(ஜன.13) வெளியாக உள்ள வலிமை திரைபடத்துக்கான எதிர்பார்ப்புகள், அஜித்தின் ரசிகர்களுக்கு அப்பாலும் அதிகரித்திருக்கிறது. அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட பித்தேறிய நிலையில் திரைபடத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பாலான பொது ரசிகர்கள் மத்தியிலும் அஜித் என்ற நட்சத்திரத்துக்கான உத்திரவாத பொழுதுபோக்கு, அஜித்தின் அண்மை திரைப்படங்களில் வெளிப்படும் முதிர்ச்சியான கதைக்களம் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதுபோலவே, திரைப்படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத், தனது சதுரங்க வேட்டையில் தொடங்கி, காட்சிமொழிக்கு அடிப்படையான எழுத்தில் மெனக்கிடுபவர் என்பதாலும், தனி எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ட்ரெய்லர் முழுக்க இரைந்திருக்கும் பிஜிஎம், அஜித் ரசிகர்களை கொண்டாட செய்திருக்கின்றன.

சுமார் 3 நிமிடங்களுக்கு நீளும் முன்னோட்டத்தின் பெரும்பகுதி பைக் சாகசத்தை மையமாகக் கொண்டே விரிகிறது. அதற்கான உழைப்பு பிரமிக்க வைக்கிறது. அதிலும் பைக் சாகசக்காரரான அஜித், அந்த காட்சிகளில் ஏகமாய் பொருந்திப் போகிறார். சாகச காட்சிகளுக்கு அப்பால் வசனங்கள் கூர்மையாக தெறிக்கின்றன. திரைபடத்தின் வில்லன் கதாபாத்திரம் நாயகனுக்கு நிகராக, திடமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

த்ரில்லர், ஆக்‌ஷன் ஆகியவற்றோடு அம்மா பாசத்தையும் ட்ரெய்லர் பிழிந்திருக்கிறது. முழு நீள திரைப்படம் பார்த்தால்தான், வலிமை உருவாக்கும் மாஸ்+கிளாஸ் சேர்மானத்தின் சுவாரசியங்கள் பிடிபடும். அதற்கு முன்னதாக பைக் சாகசங்களுக்காகாவே ட்ரெய்லரை மீண்டும் மீண்டும் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். வெளியான ஒரு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது வலிமை ட்ரெய்லர்.

பொங்கலுக்கு பெரிதாய் தமிழ் திரையுலகிலிருந்து போட்டி இல்லாதது வலிமைக்கு சாதக அம்சம் என்றபோதும், திரையிடலையே தள்ளிப்போகச் செய்யும் பெரிய வில்லனாக கரோனா பரவல் காத்திருக்கிறது. அவற்றை எதிர்கொள்வதற்கான வலிமையும், வலிமை திரைப்படத்துக்கு கிட்டட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in