வெளிநாட்டுக்கு பைக் சுற்றுலா சென்றுள்ள நடிகர் அஜித், பெல்ஜியத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நடிகர் அஜித்குமார், ஹெச். வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அந்த ஷெட்யூல் முடிவடைந்த நிலையில், அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.
இதற்கிடையே பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார், கிடைக்கும் இடைவெளியில் பைக்கில் நீண்ட தூரம் சுற்றுவது வழக்கம். ’வலிமை’ படப்பிடிப்பு முடிந்ததும் அவர் நண்பர்களுடன் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுலா சென்று வந்தார்.
இந்நிலையில் இப்போது அவர், ஐரோப்பிய நாடுகளில், பைக்கில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள BMW 1200RT பைக்குடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அவர் அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள அட்டோமியம் (Atomium) என்ற சுற்றுலா தளம் முன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படத்தை, லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சாகச பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சுற்றுலா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.