`தல' இல்லாமல் களமா?: 410 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட பேனர் வைத்து 'துணிவை'க் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

அந்த பேனர்
அந்த பேனர்

நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' திரைப்படம் நாளை மறுதினம் வெளியாவதை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் 410 அடி நீளத்திற்கு பேனர் வைத்து பிரம்மாண்டம் காட்டியுள்ளனர். 

நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும், நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் நாளை மறுதினம் புதன்கிழமையன்று வெளியாகிறது.  இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் வழிபாடு செய்தும், பேனர்களை பிடித்தபடியும்  பிரார்த்தித்து வருகிறார்கள். நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் 108 தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தனர்.

ஆழ்கடலிலும்,  மலை உச்சியிலும்  பேனர்கள் கட்டியும் தங்கள் தலைவரின் படம் வெற்றி அடைய வேண்டும் என்று நூதன செயல்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் 410 அடி நீளத்திற்கு பேனர் அடித்து சுவற்றில் ஒட்டி தங்கள்  'தல'யின் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்கள். 

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சோலைநகர் முற்றிலும் மீனவ பகுதியாகும்.  இந்த பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள்  அஜித்தின் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் எதையாவது செய்ய வேண்டும் என்று யோசித்து 410 அடி நீளத்திற்கு பேனர் தயாரித்துள்ளனர். அங்குள்ள இளைஞர்  விடுதியின் நீண்ட காம்பவுண்ட் சுவற்றில் முழுவதுமாக அதாவது 410 அடி நீளத்திற்கு அதை ஆணி அடித்து பொருத்தி  'துணிவு' படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர்.

இந்த பேனரில் அஜித் இதுவரை நடித்துள்ள படங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் வரிசையாக  அச்சிடப்பட்டுள்ளன.  தல இல்லாமல் களமா?  என்ற கேள்வி எழுப்பும் அந்த பேனர்,  'துணிவு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறது.

அஜித் ரசிகர்களின் இந்த பிரம்மாண்டத்திற்கு  விஜய் ரசிகர்கள் பதிலுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு புதுச்சேரியில் நிலவுகிறது.

படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in