‘துணிவு’ வெற்றி நிச்சயம்: அஜித் ரசிகர்களின் ‘விநியோக’ உதாரணம்

‘துணிவு’ வெற்றி நிச்சயம்: அஜித் ரசிகர்களின் ‘விநியோக’ உதாரணம்

அஜித் குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் துணிவு திரைப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற அஜித் ரசிகர்கள், தங்கள் ஆருடத்துக்கு ஆதரவாக திரைப்படத்தின் விநியோக நிறுவனங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் வரும் பொங்கல் திருநாளில் மற்றுமொரு தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறார்கள். விஜய் நடிப்பில் ’வாரிசு’, அஜித் நடிப்பில் ‘துணிவு’ என கோலிவுட்டின் நடப்பு உச்ச நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். தங்கள் நாயகர்களையும் அவர்களது படங்களையும் கொண்டாடும் வகையில், சமூக ஊடகங்களின் வாயிலாக ரசிகர்களின் மோதலும் தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு தீனியிடும் வகையில் படக்குழுவினரும் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றிரவு வெளியான அப்டேட், கடல் கடந்த திரைப்பட விநியோகம் சார்ந்தது. இந்தியாவுக்கு அப்பால் வெளிநாடுகளுக்கான ’துணிவு’ விநியோக உரிமையை லைகா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அதில் அமெரிக்க விநியோகத்தை மட்டும் அங்குள்ள இந்திய பின்னணியிலான விநியோக நிறுவனம் ’சரிகம சினிமாஸ்’ பெற்றுள்ளது. இது குறித்த அறிவிப்பை சரிகம சினிமாஸ் நிறுவனம், க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றின் வாயிலாக பிரகடனம் செய்துள்ளது. வெளியான சில மணி நேரங்களில் இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களை குதூகலிக்கச் செய்யும் வகையில் இந்த வீடியோவில், ‘ஆரம்பிக்கலாமா.. அடிச்சுத் தூக்கலாமா.. தல சம்பவம் பொங்கலுக்கு ஆரம்பம்’ என்ற பஞ்ச் வாசகங்களுடன் விநியோக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்துடனான செய்தியில், ‘அஜித் குமாரின் துணிவு திரைப்படத்தை இந்த பொங்கலுக்கு அமெரிக்காவில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும் என்றும் நம்புகிறோம்’ என்றும் சரிகம சினிமாஸ் தெரிவித்துள்ளது.

இந்த பகிர்வை சகல சமூக ஊடகங்களிலும் பகிரும் அஜித் ரசிகர்கள் விநியோக நிறுவனங்களின் அண்மை வெற்றியை உதாரணமாக்கி, துணிவு திரைப்படமும் மகத்தான வெற்றி பெறும் என்று மகிழ்கிறார்கள். ’தமிழகத்தின் விநியோக உரிமையை பெற்றிருக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ’விக்ரம்’, வெளிநாட்டு விநியோகத்துக்கான லைகா நிறுவனத்தின் ’பொன்னியின் செல்வன்’, அமெரிக்க விநியோகத்துக்கான சரிகம சினிமாஸ் நிறுவனத்தின் ’ஆர்ஆர்ஆர்’ மற்றும் ’கேஜிஎஃப்-2’ ஆகியவை அண்மையில் மகத்தான வெற்றியை ருசித்திருக்கின்றன. அந்த வரிசையில் துணிவு திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெறும்’ என்று கொண்டாடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in