அஜய்ரத்னம் : கமல் எனும் கலைஞன் செதுக்கிய சிற்பம்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
அஜய்ரத்னம் : கமல் எனும் கலைஞன் செதுக்கிய சிற்பம்!

கற்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். அதேபோல், எந்தத் துறையில் இருந்தாலும் திறமை மட்டும் இருந்துவிட்டால், அவர்களை கைதூக்கிவிடுவதற்கோ அல்லது கைப்பிடித்து கூட்டி வருவதற்கோ எவரேனும் இருப்பார்கள். அதுதான் அந்தத் திறமையாளருக்குக் கிடைக்கிற பாதையும் பயணமும்! தமிழ்த் திரையுலகில், எந்த நடிகரின் சாயலுமில்லாமல் நடிக்கிற நடிகர்களில் அஜய் ரத்னமும் ஒருவர்.

பார்க்கும்போது சிரிக்கிற முகமாகத் தோன்றும். அதேசமயத்தில் அந்தச் சிரிப்பையும் தாண்டி, வில்லத்தனமும் எட்டிப்பார்க்கும். அவரின் பார்வையில் குறுகுறுப்பும் இருக்கும். அதேசமயம் வெறித்தனமும் அடங்கியிருக்கும். குரலும் அப்படித்தான்! கடமையும் கண்ணியமும் கொண்ட குரலாகவும் கம்பீரம் காட்டும். வெறியும் வன்மமும் கொண்ட குரூரத்தையும் அந்தக் குரல் கொண்டிருக்கும்.

1989-ல், ‘நாளைய மனிதன்’ என்ற படம் வந்தது. இவர்தான் விஞ்ஞானத்தின்படி ‘நாளைய மனிதன்’ போல் நடித்தவர். நெடுநெடு உயரமும் பற்கள் தெரிய சிரிப்பதும் அலறுவதும் பார்க்க, பெரியவர்களே கிடுகிடுத்துப் போனார்கள். அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி நாளைய மனிதனாகவே இவர் எடுத்த அவதாரம்தான், அறிமுகப்படம் இவருக்கு!

அடுத்தடுத்து, அடுத்தடுத்த வருடங்களில் படங்கள் கிடைத்தன. ’அதிசய மனிதன்’ என்றொரு படத்திலும் நடித்தார். ’திருப்புமுனை’ என்ற படத்திலும் நடித்தார். ஆனால், அஜயின் திறமை முழுமையாக வெளிப்படும் வகையிலான படம் கிடைக்காமல் இருந்தது. திறமை எங்கே இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, கைதூக்கி விடுவார் கமல்ஹாசன். அல்லது தன் கைப்பிடித்து அழைத்துக் கொண்டே போவார். அஜய் ரத்னம் விஷயத்தில், இந்த இரண்டுமே செய்தார் கமல் என்றுதான் சொல்லவேண்டும்.

கமல்ஹாசன், தன் மேனேஜர் டி.என்.எஸ். என்று அழைக்கப்படும், டி.என்.சுப்ரமணியத்துக்காக ‘குணா’ படத்தை பண்ணினார். தன் நீண்டகால மேலாளருக்கான படமாக இதில் நடித்த கமல், தனது நண்பரான சந்தானபாரதியை இயக்கத்திலும் ஈடுபடச் செய்தார். அதேபோல், தன் குருநாதர்களில் ஒருவரான அனந்து சாரை, ‘அப்பனென்றும் அம்மையென்றும்’ பாடலுக்கு நடிக்கவும் வைத்தார். தன் இனிய நண்பர் எழுத்தாளர் பாலகுமாரனை வசனம் எழுதச் செய்தார். காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி, பிரபல நடிகர் க்ரீஷ் கர்னாட், சரத் சக்சேனா, தன் அண்ணனைப் போல் பாவிக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலானோரையும் நடிக்க வைத்தார் கமல். அதே படத்தில், போலீஸ்காரராக அஜய் ரத்னத்தையும் நடிக்கச் செய்தார். மலைக்குகையில் ரோஷிணியைக் கடத்தி வைத்திருக்கும் குணாவைப் பிடிக்க, காட்டுக்குள்ளிருந்து காவல் துறையினருடன் கூட்டு சேர்ந்து அஜய் பரபரக்கும் ஒவ்வொரு காட்சியும் அவருக்கானவையாக அமைந்தன. மனிதர், தன் நடிப்பில் கவனம் ஈர்த்தார்.

இதையடுத்து, அஜய் ரத்னம் எனும் பெயர் திரையுலகில் அதிக அளவுக்கு வலம் வரத்தொடங்கியது. அவரும் ஏராளமான படங்களில் வலம் வந்தார். ’தர்மதுரை’, ‘மதுரைவீரன் எங்கசாமி’, ’தையல்காரன்’, ’நண்பர்கள்’, ‘காவல்நிலையம்’ என பிஸியான நடிகராக வளர்ந்துகொண்டே இருந்தார் அஜய்.

மீண்டும் கமல் அழைத்தார். இளையராஜாவின் தயாரிப்பில், ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான ‘சிங்கார வேலன்’ படத்தில், காமெடியிலும் தூள்கிளப்பினார் அஜய்ரத்னம்.

அதேவருடத்தில், அஜய்ரத்னத்துக்கு அடித்தது மிகப்பெரிய ஜாக்பாட். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், சிவாஜியையும் கமலையும் இணைத்து எடுத்த ‘தேவர் மகன்’ படத்தை மறந்துவிடமுடியுமா? பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி, காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன், சங்கிலி முருகன், நடிகை ரேணுகா, தலைவாசல் விஜய் முதலானோருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி எனும் கதாபாத்திரத்தில் அஜய் ரத்னத்துக்கு வாய்ப்பு அளித்தார் கமல். நியாயமும் நேர்மையும் கொண்ட அந்த போலீஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் நமக்குள்ளேயும் அவர் மீது பரிவும் மரியாதையும் வரும். அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து அசத்தினார் அஜய்ரத்னம்.

இதன் பிறகு இயக்குநர் மணி ரத்னம் ’திருடா திருடா’ முதலான படங்களில் அஜயைப் பயன்படுத்திக் கொண்டார். இயக்குநர் ஷங்கர் தன் முதல்படமான ‘ஜென்டில்மேன்’ படத்திலும் ’காதலன்’ படத்திலும் பயன்படுத்திக்கொண்டார். ’வீரா’, ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில்’, ‘வேடன்’, ‘நண்பர்கள்’, ’ஹானஸ்ட் ராஜ்’, ’அதர்மம்’ என பெரும்பாலான படங்களில், நடித்து வந்தார் அஜய்ரத்னம்.

மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்தபடி இருந்தது. இவரும் நடித்துக்கொண்டே இருந்தார். இயக்குநர் விக்ரமனின் ‘சூர்யவம்சம்’ முதலான படங்களில் நடித்தார். அஜித் படங்களிலும் விஜய் படங்களிலும் நடித்தார். நாகார்ஜுனா நடித்து கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ‘ரட்சகன்’ படத்திலும் அட்டகாசமான கதாபாத்திரம் அமைந்தது. தன் சிறப்பான நடிப்பை வழங்கினார்.

மீண்டும் கமல் அழைத்தார். தன் நிறுவனத்தில் ஒளிப்பதிவுக் கவிஞன் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் நாசருக்கு மிக முக்கியமான ரோல் கொடுத்து உருவாக்கிய ‘குருதிப்புனல்’ படத்தில் ‘பாம்’ வெடிக்கச் செய்யும் மிக முக்கியமான கேரக்டரை அஜய் ரத்னத்துக்கு வழங்கினார் கமல். அதிலும் நடிப்பில் மிரட்டினார் அஜய். கமலுடனான அஜய் ரத்னத்தின் பயணம் என்பது, ’காதலா காதலா’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ என தொடர்ந்தபடி இருக்கிறது.

இன்னொரு பக்கம், ‘மர்மதேசம்’ எனும் பிரபலமான டெலி சீரியலிலும் நடித்து மிரட்டினார் அஜய். ’விடாது கருப்பு’, ‘சித்தி’, ‘அண்ணாமலை’, ’ரமணி வெர்சஸ் ரமணி’ என பல சீரியல்களில் நடித்து பிரமிக்க வைத்தவர், இன்றைக்கும் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் ‘ரிதம்’ மாதிரியான படங்களிலும் இயக்குநர் ஷரவண சுப்பையா இயக்கிய ‘சிட்டிசன்’ மாதிரியான படங்களிலும் ’உத்தம வில்லன்’ படத்திலும் என ஒவ்வொருவிதமாக தனக்குக் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் ஸ்கோர் செய்துகொண்டே வந்தார். இன்னமும் அசத்திக் கொண்டிருக்கிறார் அஜய்ரத்னம்.

அஜய்ரத்னத்துக்கு இன்னொரு முகமும் உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். தன்னம்பிக்கையாளர். தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை இளைஞர்களிடையே பேசி, இளைஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிற பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பேசினால், ‘அண்ணாமலையானுக்கு அரோகரா’ ‘அருணாசலம்’ என்று சிவ பக்தியுடனும் இறைபக்தியுடனும் இருக்கிறார். தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கப்பயிற்சிகள் நடத்துகிறார். இறைபக்தியுடனும் திகழ்கிறார்.

’’கல் எப்போதுமே கல்லாக இருந்துவிடுவதில்லை. தேர்ந்த சிற்பியின் கண்களில் பட்டுவிட்டால் போதும்... அந்தக் கல்லை சிற்பமாக்கிவிடுவார் சிற்பி. என் வாழ்வில் வெறும் கல்லாக இருந்த என்னை, ஒரு சிற்பியாக சிலையெனச் செதுக்கி உயர்த்தி வைத்து அழகு பார்த்தவரும் புதியதொரு வாழ்வைக் கொடுத்தவரும் கமல் சார்தான்! அவரை என் வாழ்வில் மறக்கவே முடியாது’’ என்று ஒருமுறை என்னிடம் பேசும்போது சொன்னார் அஜய்ரத்னம்.

1965-ல் நவம்பர் 28-ம் தேதி அஜய் ரத்னம் பிறந்தநாள். தனக்கு பாதை வகுத்துக் கொடுத்தவர் கமல் எனும் நன்றியுணர்வுடன் திகழும் அஜய் ரத்னம், இன்னும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தன் பேச்சால், தன்னம்பிக்கையைப் புகட்டி, ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவோம்!

பிறந்தநாள் வாழ்த்துகள் அஜய் ரத்னம் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in