`கைதி’ இந்தி ரீமேக்: இயக்குநர் திடீர் மாற்றம்!

`கைதி’ இந்தி ரீமேக்: இயக்குநர் திடீர் மாற்றம்!

’கைதி’ படத்தின் இந்தி ரீமேக்கில் அதன் இயக்குநர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’கைதி’. நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படம், 2019-ம் ஆண்டு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றக் கடும் போட்டி நிலவியது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தங்கள் நிறுவனமே அனைத்து மொழிகளிலும் படத்தைத் தயாரிக்கும் என்று அறிவித்தார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் பெற்றிருந்தார். அவரே கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், கைதி இந்தி ரீமேக் படப்பிடிப்பு மும்பையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பிரபல எடிட்டரான இவர், அஜய்தேவ்கனின் உறவினர்.

அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ’போலா’ (Bholaa) என்று தலைப்பு வைத்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் தர்மேந்திர ஷர்மாவை மாற்றிவிட்டு நடிகர் அஜய் தேவ்கனே படத்தை இயக்கி நடிக்கிறார். அஜய் தேவ்கன் இயக்கும் நான்காவது படம் இது. அவர் ஏற்கெனவே ‘யு மி அவுர் ஹம்’, ’ஷிவாய்’, ’ரன்வே 34’ படங்களை அடுத்து இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் தபு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அடுத்த வருடம் மார்ச் 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in