டிரைவர் ஜமுனாவை உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்!

ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அடையாளம் பெற்று, ‘காக்கா முட்டை’யில் நிமிர்ந்து பார்க்க வைத்து, ‘தர்மதுரை’யில் தனித்து கவனிக்க வைத்து முன்னேறிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது வரிசையாக பல பெண் மையப் படங்களுக்குத் தேர்வு செய்யப்படும் அளவுக்குத் முன்னேறியிருக்கிறார். ‘கனா’, ‘கா/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்கள், கதாநாயகர்களின் படங்களில் அவர்களை மீறி எழுந்து நிற்கும் கதாபாத்திரங்கள் காரணமாக ஐஸ்வர்யாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ நவம்பர் 11-ம் தேதி தியேட்டர்களுக்கு வரவிருக்கும் நிலையில் காமதேனுவுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...

‘அட்டக்கத்தி’ அமுதாவை நினைவில் வைத்திருக்கிறீர்களா?

இல்லாமல் எப்படி? ‘அட்டக்கத்தி’ படத்தில் கமிட் ஆவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே நடிக்கத் தொடங்கிவிட்டேன். என்றாலும் என்னை ரசிகர்கள் கண்டுகொண்டது அந்தப் படத்திலிருந்துதானே! பா.இரஞ்சித் சார் இன்றைக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர். அவர் இயக்குநராக அறிமுகமான படத்தில் நடித்தது எனக்குப் பெருமைதான்.

‘சுழல்’ ஓடிடி தொடரில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

கதை என்கிற அளவிலும், அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களை பிரமிக்க வைக்கும் விதமாக, அதேநேரம் விஷுவலாக எவ்வளவு பிரம்மாண்டமாக படமாக்க வேண்டும் என்பதிலும் தமிழில் இதற்குமுன் இப்படியொரு வெப் சீரீஸ் வந்ததில்லை என்று சொல்லலாம். ‘சுழல்’ என்கிற தலைப்பு கதாபாத்திரங்களை எந்த அளவுக்கு வாழ்க்கை எனும் சுழலுக்குள் சிக்க வைத்திருக்கிறது என்பதைக் காட்டிய தொடர் அது. அதில் நான் ஏற்ற நந்தினி கதாபாத்திரம், நமது சமூகத்தில் அதிகமாக இருக்கக் கூடியது. ஆனால், நந்தினிகள் வாய் திறந்து தங்களுக்கு நடந்ததைப் பேச முன்வர வேண்டும். அப்போதுதான், நம் அருகிலேயே உறவினர்கள், நண்பர்கள் என்கிற பெயரில் இருந்துகொண்டு, சைல்ட் அப்யூஸ் செய்பவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க முடியும்.

‘டிரைவர் ஜமுனா’ உட்பட வரிசையாக பெண் மையப் படங்களை ஒப்புக்கொண்டு நடிக்கிறீர்கள்! இனி, கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதில்லை என்கிற முடிவுக்கே வந்துவிட்டீர்களா?

ஐயோ! என் சினிமா வாழ்க்கையையே முடித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! தற்போது நான் ஒப்புக்கொண்டிருக்கும் சோலோ ஹீரோயின் கதாபாத்திரங்கள் அனைத்துமே என்னைத் தேடி வந்தவைதான். ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று எங்கேயும் நான் சொல்லவில்லை. எந்த வகைப் படமாக இருந்தாலும் அதில் எனக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது எதிர்பார்ப்பு.

‘டிரைவர் ஜமுனா’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

பெண்கள் இன்று எல்லா துறையிலும் சாதிக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் கார் ஓட்டினாலும் வாடகைக் கார் ஓட்டும் பெண்கள் குறைவுதான். அதேநேரம், ஆட்டோ ஓட்டும் பெண்கள் அதிகம். இன்று, உணவு டெலிவரிக்காக கஷ்டம் என்று கருதாமல் உழைக்கும் பெண்களும் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கால் டாக்ஸி டிரைவராக தனது கேரியரை அமைத்துக்கொண்ட ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கைதான் ஒரு நாள் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படம்.

படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் உண்டா?

இருக்கிறது. படத்தில் கார் சேஸிங் காட்சிகளில் நானே துணிந்து கார் ஓட்டி நடித்திருக்கிறேன். எனக்கு கார் ஓட்டுவது ரொம்பப் பிடிக்கும். நான் வேகமாக கார் ஓட்டுவதைப் பார்த்து எனது அண்ணன் உட்பட யாரும் என்னுடைய காரில் ஏறமாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களை பயமுறுத்திவிடுவேன். படப்பிடிப்பிலும் நான் கார் ஓட்டியதில், காரின் உள்ளே கேமரா மேனுடன் உட்கார்ந்திருந்த ஃபோகஸ் புல்லர் பயந்துபோய், “இவங்க கார் ஓட்டுறதா இருந்தா நான் ஷூட்டிங் வரல” என்று சொல்லிவிட்டு இறங்கிப் போய்விட்டார். இப்படி பல சம்பவங்கள். இந்தப் படத்தில் ஸ்டண்ட் டைரக்டர் அனல் அரசு சாரிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என்று சொல்லி அவ்வாறே நடித்திருக்கிறேன். சேஸிங் காட்சிகள் அனைத்தையும் தேசிய நெடுஞ்சாலைகளில் எடுத்தோம். அதனால் மறக்க முடியாத அனுபவமாக படப்பிடிப்பு இருந்தது.

தமிழ் அளவுக்கு தெலுங்குப் படங்களிலும் அதிக எண்ணிக்கையில் நடிக்கத் தொடங்கியிருக்கிறீர்களே..?

தமிழில் நடிப்பது எப்படி எனக்கு மகிழ்ச்சியைத் தருமோ... அதே அளவுக்கு தெலுங்குப் படத்தில் நடிப்பதும் பிடிக்கும். ஏனென்றால் என்னுடைய அப்பா தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் நடித்தவர். என்னுடைய அத்தை 500 படங்களுக்கு மேல் நடித்தவர். எனது குடும்பத்துக்கும் தெலுங்குத் திரையுலகத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. என்றாலும் எனக்கு தமிழ் சினிமாவுடன் தான் நெருக்கமான தொடர்பு உண்டு. ஏனென்றால், நான் சென்னையில் பிறந்து, வளர்ந்த பெண். தமிழில்தான் அதிகமாக நடிக்கிறேன்.

இனி, உங்கள் படங்களை தியேட்டர்களில் எதிர்பார்க்கலாமா?

நிச்சயமாக... ‘கா.பெ.ரணசிங்கம்’ உட்பட கோவிட் காலத்தில் ஓடிடியில் வெளியான பல படங்கள் தியேட்டர் ரிலீஸுக்காக எடுக்கப்பட்டவைதான். ஆனால், ஓடிடியில் உலகின் பல மொழிப் படங்களையும் பார்த்துப் பார்த்து பழகிவிட்ட மக்கள், நல்ல கதையாக இருந்தால், அதுவும் சுவாரசியமாகப் படமாக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பார்க்க தியேட்டருக்கு வருகிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தியேட்டருக்கு வந்தால் ரசிகர்கள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அதுவே, சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் வித்தியாசமான கதைக்களம் என்றால் அவர்களுக்குப் பிடிக்கிறது. நிச்சயமாக ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகைப் படம்தான். அவளை உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in