ஐஸ்வர்யா ராஜேஷ் : நவீன சினிமாவின் யதார்த்த நாயகி!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ஐஸ்வர்யா ராஜேஷ் : நவீன சினிமாவின் யதார்த்த நாயகி!

சாவித்திரியையும் பத்மினியையும் முன்னிலைப்படுத்தி அவர்களைக் கொண்டே கதை பண்ணப்பட்டு, படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. விஜயகுமாரிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் கொண்டு, கதைக்கு வலு சேர்த்த படங்களும் வந்திருக்கின்றன.

எழுபதுகளின் மத்தியில் லட்சுமி மகத்துவ நடிப்பை வழங்கினார். சுஜாதா வந்தார். பிரமிக்கவைத்தார். ஸ்ரீப்ரியா வந்தார். கலக்கியெடுத்தார். சரிதா தன் நடிப்பால் முத்திரை பதித்தார். எண்பதுகளில், சுஹாசினி ஒருபக்கமும் ரேவதி ஒருபக்கமும் ரோகிணி மற்றொரு பக்கமும் என தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களுக்கும் உரிய நியாயம் சேர்த்து வெற்றியையும் தந்தார்கள். பிறகு மிகப்பெரிய தேக்கநிலை உருவானது.

மீண்டும் ஹீரோக்களின் கதைகளே எடுக்கப்பட்டன. லட்சக்கணக்கான பிசினஸ், கோடிக்கணக்கான சம்பளமாகவும் பிசினஸ்களாகவும் உருமாறின. அந்த தருணத்தில் எல்லோரும் ஹீரோக்களின் பின்னே ஓடினார்கள். ஆனாலும் 2000-க்குப் பின்னர் கொஞ்சம் மாற்றம் நிகழத் தொடங்கியது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ‘அறம்’, ‘அருவி’ மாதிரியான படங்களும் வரத்தொடங்கின. அப்போதுதான், ஐஸ்வர்யா ராஜேஷும் வந்தார். இயல்பான முகமும் எளிமையான நிறமும் கொண்டு தன் இயல்பான நடிப்பால், உள்ளிருக்கும் அசுரத்தனமான நடிப்பை, படத்துக்குப் படம் ஒவ்வொரு மாதிரியாக, ஒவ்வொருவிதமாகக் கொடுக்கத் தொடங்கினார்!

’அசத்தப்போவது யாரு’, ‘மானாட மயிலாட’ என்றெல்லாம் வந்து அசத்திய பரிச்சய முகம்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், படங்களிலும் வரத்தொடங்கினார். பா.இரஞ்சித்தின் ‘அட்டகத்தி’யில் அமுதாவாக வரும்போதுதான் கவனம் ஈர்த்தார். அதில் இருவரும் சேரமுடியாமல் போகும். ஆனால், சிவகார்த்திகேயன் ‘எதிர்நீச்சல்’ படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷையும் தினேஷையும் சேர்த்துவைத்துப் புண்ணியம் தேடிக்கொண்டார்.

தடதடவென படங்கள் கிடைத்தாலும் மளமளவென கையெழுத்துப் போட்டு ஏற்றுக்கொள்ளவில்லை ஐஸ்வர்யா ராஜேஷ். திருப்பூரைப் பூர்விகமாகக் கொண்டவர். தந்தை ராஜேஷ், தெலுங்கு நடிகர். இவர் மட்டுமா? ஐஸ்வர்யாவின் தாத்தா அமர்நாத்தும் நடிகர்தான். ஆனால், தாத்தாவை விட, அப்பாவை விட பேர் வாங்கும் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் முனைப்புக் காட்டினார் ஐஸ்வர்யா.

அத்தி எப்போதாவதுதான் பூக்கும் என்பார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, அடிக்கடி பூத்தது. மணிகண்டனின் ‘காக்காமுட்டை’ படத்தில், சேட்டைக்காரப் பசங்களை ஒருபக்கமும் கைதுசெய்யப்பட்ட கணவனை மறுபக்கமும் பார்த்துக்கொண்டு, குப்பத்துப் பெண்ணாகவே அழகு காட்டி அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய் சேதுபதியுடன் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திலேயே தன் நடிப்புத் திறனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். நீண்டகாலத்துக்குப் பிறகு, பாவாடை தாவணியில் வலம் வரும் நாயகியையும் எளிய பாந்தமான நடிப்பையும் கண்டு பூரித்தார்கள் ரசிகர்கள்.

வெயிட்டான கதாபாத்திரமோ சோகமான கேரக்டரோ கொடுத்தால்தான் நடிப்பார் என்பதில் இருந்து சற்றே விலகி, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படத்தில் காமெடியிலும் ரகளை பண்ணினார் ஐஸ்வர்யா. சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தில் கிரிக்கெட் விளையாடும் கிராமத்துப் பெண்ணாக அதகளம் பண்ணியிருப்பார்.

மனிதம் பேசுகிற சீனு ராமசாமியின் ‘தர்மதுரை’ படத்தில், பத்திரிகைகளுக்கு துணுக்கு எழுதும் தேனிப்பக்க கிராமத்துப் பெண்ணையும் அவளின் ஏக்கத்தையும் அச்சு அசலாகக் காட்டியிருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நியாயத்தின் பக்கம் தீர்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி மருகுகிற ஊடகத்துறையைச் சேர்ந்தவராக ‘மனிதன்’ படத்திலும் மணி ரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், இலங்கைத் தமிழ் பேசுகிற எப்போதும் மரணத்தையோ தோல்வியையோ எதிர்பார்த்திருக்கிற கதாபாத்திரத்தையும் நம் கண்முன்னே உலவவிட்டதில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ், நவீன சினிமாவின் யதார்த்த நாயகி என்பதெல்லாம் நிரூபணமானது.

இயக்குநர் பாண்டிராஜின் ‘நம்மவீட்டுப்பிள்ளை’ படத்தில் தங்கச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ். ‘பாசமலர்’, ‘தங்கைக்கோர் கீதம்’ படங்களுக்கெல்லாம் பிறகு, தங்கை கேரக்டர் இத்தனை கனமாகவும் ஆழமாகவும் பேரன்புடனும் இந்தப் படத்தில் சொல்லப்பட, ஐஸ்வர்யா ராஜேஷ் அதையெல்லாம் உணர்ந்து தன் முகபாவங்களால் பண்பட்ட நடிப்பால் கலங்கடித்து கண்ணீர் கசியவிட்டார்!

வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில், சென்னை பாஷை பேசியும் ஆம்பளைச் சட்டையைப் போட்டுக்கொண்டும் பத்மா கேரக்டருக்கு ஜீவன் கொடுத்திருப்பார். ‘குற்றமே தண்டனை’ படத்திலும் ‘க/பெ.ரணசிங்கம்’ படத்திலும் நடித்ததெல்லாம் எல்லையில்லாத பெரு உணர்ச்சிகளின் வார்ப்புகள்.

தமிழில்தான் இப்படியா என்றால் மலையாளத்திலும் நல்ல கதாபாத்திரங்களுக்கும் நல்ல நடிகையருக்கும் எப்போதும் சிவப்புக் கம்பளம் உண்டுதானே. அங்கேயும் இவரின் நடிப்புக்கு வேட்டைதான்! தெலுங்குப் பக்கமும் நடித்து ‘கெத்து’ காட்டினார். ‘சாமி 2’, ‘லட்சுமி’, ‘ஆறாது சினம்’ முதலான படங்களிலும் அந்தக் கேரக்டருக்கு உயிர் கொடுப்பதில் ஐஸ்வர்யா ராஜேஷ், தனித்துத் தெரிந்து ஜொலித்தார்.

சினிமா மட்டுமின்றி, வெப் சீரிஸிலும் கலக்கியெடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். மிகப்பெரிய ஹிட்டடித்த ‘சுழல்’ சீரிஸில், பார்த்திபனின் மகளாக விஸ்தாரமான நடிப்பை, வெகு இயல்பாக நமக்குள் கடத்தியிருப்பார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், தனித்துவ நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதியில், நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமென்றால், ஐஸ்வர்யா ராஜேஷை யோசித்து மீதிக்கதையை உருவாக்குகிற இயக்குநர்கள்தான் அநேகம். அந்த அளவுக்கு போட்டியில் தனியே களமிறங்கி, தனித்து ஒளிர்ந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல விருதுகளையும் பெற்று இன்னும் இன்னுமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

1990-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பிறந்த, நவீன சினிமாவின் யதார்த்த நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை மனதார வாழ்த்துவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in