'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்

'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்

'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தது பற்றி நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

’க/பெ ரணசிங்கம்’, ‘ப்ளான் பி’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. 18 ரீல்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இப்படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், '' நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். 'கனா' படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என்னுடையத் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'.

இயக்குநர் கின்ஸ்லின், கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னைச் சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி.

மேலும் அந்த தருணத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் ’டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்" என்றவர் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

”எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in