இந்தியாவின் முதல் ‘பயோ-வார்’ படம்: அக்னிஹோத்ரி கிளப்பிய விவாதம்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வரிசையில் ‘தி வாக்ஸின் வார்’
இந்தியாவின் முதல் ‘பயோ-வார்’ படம்: அக்னிஹோத்ரி கிளப்பிய விவாதம்

இந்தியாவின் முதல் பயோ-வார் திரைப்படம் என்ற முன்மொழியுடன் தனது அடுத்த படமான ‘தி வாக்ஸின் வார்’ குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.

அக்னிஹோத்ரி முன்னதாக இயக்கிய ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் நடப்பாண்டு இந்திய சினிமாவிலும், அரசியலிலும் பல சர்ச்சைகளை கிளப்பியது. காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாதம் காரணமாக மண்ணின் மக்களான காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை உண்மையும் சித்தரிப்பும் கலந்து படமாக்கி இருந்தார். ஆளும் பாஜக அரசும் பிரதமர் மோடி உள்ளிட்டோரும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை சிலாகித்திருந்தனர். இது திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமானது. இந்த திரைப்படம் காஷ்மீரகம் குறித்த புதிய விவாதங்களையும் பொதுவெளியில் உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியாக தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை அக்னிஹோத்ரி இன்று(நவ.10) வெளியிட்டுள்ளார். புதிய திரைப்படத்தின் கதையும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் உருவாக்கத்தின் மத்தியில் பிறந்ததாகவும் அவர் விளக்கம் தந்துள்ளார். ‘கரோனா பரவல் காரணமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. அந்த இடைவெளியில் கரோனா குறித்தும் கரோனா தடுப்பூசிகள் குறித்து நிறைய அறிந்துகொள்ள வாய்ப்பானது. நமது இந்திய அறிவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்களையும், அந்த சவால்களை அவர்கள் முறியடித்த விதத்தையும் பதிவு செய்ய விரும்பினேன். தி வாக்ஸின் வார் அப்படியான அடிப்படையில் வித்தியாசமான திரைப்படமாக உருவாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தி வாக்ஸின் வார் திரைப்படம் இந்தியாவின் முதல் ’பயோ-வார்’ திரைப்படம் என்றும் அக்னிஹோத்ரி அறிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் அக்னிஹோத்ரி வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு அதிகம் கிடைத்த வரவேற்புகளுக்கு மத்தியில் கனிசமான கண்டனமும் சேர்ந்தது. ’இந்தியாவின் விளைபொருட்களை ஆங்கிலேய அரசு அள்ளிச்சென்றபோதே இந்தியாவுக்கு எதிரான உயிரி போர் தொடங்கி விட்டது. அதன் பின்னர் மலட்டு விதைகள், மரபணு மாற்றங்கள், கலப்பின கால்நடைகள் என இந்தியாவுக்கு எதிரான உயிரி போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விவேக் அக்னிஹோத்ரி
விவேக் அக்னிஹோத்ரி

பயிர், கால்நடை மட்டுமன்றி மனித உயிரை காப்பதற்கான மருந்துபொருட்களை தயாரித்து விற்பதின் பேரிலும் கூட்டுக்கொள்ளையாக உயிர் போர் நடக்கிறது. இந்த பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுகளும் உயிரி போரை மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றன..’ என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ’இந்த உயிரி போரை அலசும் வகையில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன; தமிழில் வெளியான ’ஈ’ போன்ற படங்களும் உயிர் போர் குறித்து பேசி உள்ளன’ எனவும் விளக்கி உள்ளனர்.

தி வாக்ஸின் வார்
தி வாக்ஸின் வார்

அக்னிஹோத்ரி இயக்கத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியான பிறகே சர்ச்சைகளுக்கு அச்சாரமானது. தற்போது தி வாக்ஸின் வார் திரைப்படம் அது குறித்த அறிவிப்பின்போதே சர்ச்சைகளை வரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தி வாக்ஸின் வார் திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில், 2023 சுதந்திர தினத்தன்று உலகமெங்கும் வெளியிடப்பட இருப்பதாகவும் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in