'அகிலன்’ ; சினிமா விமர்சனம்!

'அகிலன்’
'அகிலன்’ பட விமர்சனம்!

ஜெயம் ரவி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் 'அகிலன்' திரைப்படம் எப்படி இருக்கிறது?

சென்னை துறைமுகத்தில் நடைபெறும் பல முறைகேடான கடத்தல் விஷயங்களுக்கு மையப்புள்ளியாக இருக்கிறார் 'ஜெயம்' ரவி (அகிலன்). இதற்கெல்லாம் தலைவனாக இருக்கும் கபூரை அகிலன் சந்திக்கிறார். உயிரை பணயம் வைக்கும் சட்டவிரோத கடத்தல் அசைன்மென்ட் அகிலனிடம் வந்து சேர்கிறது. இதை வெற்றிகரமாக முடித்தால், அகிலன் 'கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்'. அகிலனின் உண்மையான நோக்கம் என்ன? அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

'அகிலன்’
'அகிலன்’ 'ஜெயம்' ரவி...

அகிலனாக 'ஜெயம்' ரவி. ஹார்பர் நங்கூரமாக நச்சென்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அகிலனாக உடம்பை ஏற்றி இருப்பது, கட்டுப்படுத்திக்கொள்ளும் கோபம், அடுத்தவர்களை உசுப்பேற்றி காரியம் சாதிப்பது, வசன உச்சரிப்பு, கோபம், அழுகை என படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ப்ரியா பவானி ஷங்கர், தான்யா என கதாநாயகிகளுக்கு கதையில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்கள். சிராக் ஜானி, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ’நன்றி, விசுவாசம், கற்பு, குற்றவுணர்ச்சி, ஒழுக்கம் இதெல்லாம் இந்த சமூகம் நம்மை அடிமையாக்கவே உருவாக்கி வைத்திருக்கிறது’, ‘நான் படிக்காத அடிமைன்னா, நீ படிச்ச அடிமை’ போன்ற வசனங்களும் படத்தின் ப்ளஸ்.

விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் ஹார்பர் களமும் கடலும் திரையில் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. சுற்றி வளைக்காமல் முதல் காட்சியில் இருந்தே கதையின் நோக்கமும் தீவிரமும் தொடங்குவதால், அதற்கேற்ற இசையை பின்னணியில் பல இடங்களில் தீவிரமாக கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். பாடல்களும் கதையோட்டத்தில் அமைந்திருப்பதால் அதிலும் இசையில் அதிரடி காட்டி இருக்கிறார்.

'அகிலன்’
'அகிலன்’ 'ஜெயம்' ரவி...

முதல் பாதியில், அகிலனின் நோக்கம் ‘கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்’ என்பதாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே அகிலனின் உண்மையான நோக்கம் என்ன என்னபதை சொல்லிவிடுகிறது. இதனால் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாதி கதையின் அடர்த்தியைக் குறைக்கிறது. படத்தின் நீளமும் சற்றே சோம்பல் முறிக்க வைக்கிறது. மக்கள் நலனுக்காக என நகரும் கதைக்களம், உழைப்பாளர்கள் தலைவராக வருபவருக்கு ஜனநாதன் எனப் பெயர் சூட்டியது என தன் குரு இயக்குநர் ஜனநாதானுக்கான விஷயங்களையும் சேர்த்திருக்கிறார் கல்யாண கிருஷ்ணன்.

ப்ரியா பவானி ஷங்கர் காவல்துறை அதிகாரியாகவும் 'ஜெயம்’ ரவியின் காதலியாகவும் வருகிறார். ஆனால், எல்லா காட்சிகளிலும் அகிலனுக்கு உதவுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், அவரை யாரும் சந்தேகப்படவோ கேள்வி கேட்காததோ உறுத்தல்.

உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ‘ஜெயம்’ ரவியின் எண்ணமும் அதற்கான காட்சிகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் அமைத்திருக்கிறது. ஒற்றை ஆளாக அவர் அனைத்தையும் செய்து முடிப்பார் எனும்போது எப்படியும் கதாநாயனுக்குத்தானே வெற்றி என்று முன்கூடியே தெரிந்துவிடுகிறது முடிவு.

கதை முழுக்கவே ’அகிலன்’ என்ற கதாநாயக பிம்பத்தை சுற்றியே கட்டமைத்திருக்கிறார்கள். முதல் பாதி தீவிரமாக நகர்ந்து கதைக்கான சுவாரஸ்யத்தைக் கூட்டினாலும், இரண்டாம் பாதி தெரிந்த முடிவுதானே என்ற அசுவாரஸ்யத்தையும் படம் எப்போது முடியும் என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகிறது. எனினும் முதல் பாதிக்காகவும், காட்சி அனுபவத்திற்காகவும் ஒருமுறை ‘அகிலன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in